இராணுவம் பற்றிய திரைப்படம் - கைதானவர்கள் சனல் 4 உடன் தொடர்புபட்டவர்களா?
இலங்கை இராணுவத்தின் கொடூரங்களை வெளிப்படுத்தும் வகையிலான திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள எட்டுப்பேரும் லண்டன் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்துக்காக பணிபுரிபவர்கள் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள்.
குறிப்பிட்ட திரைப்படம் சென்னையில் தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்திருக்கின்றது. இதில் சில பகுதிகள் இலங்கை இராணுவத்துடன் சம்பந்தப்பட்டவை. அதற்கு சிங்களத்தில் குரல் கொடுத்து அதற்கான ஒலிப்பதிவுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போதே கொழும்பு, நாராஹென்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் இவர்களைக் கைது செய்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றையடுத்து குறிப்பிட்ட வீட்டை சுற்றிவளைத்து சோதனை நடத்திய பொரளை பொலிஸார், அங்கிருந்த எட்டு பேரைக் கைது செய்ததுடன், ஒலிப்பதிவுக்காக பயன்படுத்தப்பட்ட கணினிகள், இறுவட்டுக்கள் உட்பட பல பொருட்களைக் கைப்பற்றியுள்ளார்கள்.
கைது செய்யப்பட்ட எட்டுப் பேரில் இருவர் சில காலத்துக்கு முன்னர் இந்தியாவில் வசித்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மூவர் வடபகுதியில் வசித்தவர்கள். தற்போது கொழும்பில் வெள்ளவத்தை உட்பட சில பகுதிகளில் இவர்கள் வசித்துவந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. கைதானவர்களில் மூவர் சிங்களவர்கள்.
அந்த திரைப்படத்தில் ஜெனீவா மனித உரிமை பேரவைக்கு கையளிக்கும் வகையிலான விடயதானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இந்த திரைப்படத்துக்கு சிங்கள குரல் கொடுப்பதற்கு சிங்களவர்கள் மூவர் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.