Breaking News

300 அரசியல் கைதிகள் சிறைகளில்! சாடுகின்றார் சுமந்திரன்

300 அரசியல் கைதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

போருக்கு பின்னர் அரசாங்கம் 11 ஆயிரத்து 900 விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்கியது. எனினும் புலிகளுக்கு சோற்று பொதி மற்றும் தண்ணீர் கொடுத்து உதவியவர்கள் வழக்குகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும் அரசியல் கைதிகள் என சுமந்திரன் கூறியுள்ளார்.

எனினும் இலங்கையில் அரசியல் கைதிகள் எவருமில்லை என சொலிஸ்டர் ஜெனரல் சுஹத கம்லத் தெரிவிக்கின்றார். பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அல்லது கைதிகளை எவரேனும் அரசியல் கைதிகள் என அடையாளப்படுத்துவார்களாயின் அது முற்றிலும் தவறானது எனவும் கம்லத் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேற்று சட்டமா அதிபர் திணைக்களத்தில் சுஹத கம்லத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துக்கள் குறித்து பதிலளிக்கும் போதே கம்லத் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு எதிர்வரும் 16 ஆம் திகதி கூடுகிறது. இந்த குழுவை அரசியல் கைதிகள் சம்பந்தப்பட்ட குழு என சமூகமயப்படுத்துவது தவறானது. சட்டரீதியாக கைது செய்யப்பட்டு தடுத்து வைத்துள்ளவர்கள், வழக்கு விசாரணைகள் தாமதமாகியுள்ளவர்கள் மற்றும் வழக்கு தாக்கல் செய்யப்படாமல் இருக்கும் கைதிகள் குறித்து ஆராய்ந்து சட்டரீதியான நடவடிக்கைகளை இந்த குழு மேற்கொள்ளும்.

கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பதா, வழக்கு தாக்கல் செய்வதா அல்லது விடுதலை செய்வதா என்பது குறித்து அந்த குழு தீர்மானிக்கும் எனவும் சுஹத கம்லத் மேலும் தெரிவித்துள்ளார்.