இலங்கையில் 275 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் - சுமந்திரன்
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மற்றும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, ஆவணங்களின் படி, சிறிலங்காவில் 275 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
“அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, சொலிசிற்றர் ஜெனரல் சுகந்த கம்லத்தினால் அமைக்கப்பட்ட குழுவின் முதலாவது கூட்டம் நேற்று சட்டமா அதிபர் திணைக்களத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்திலேயே, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மற்றும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் என்பன, தம்மிடம் உள்ள அரசியல் கைதிகள் பற்றிய ஆவணங்களை சமர்ப்பித்தன.
அவற்றில் உள்ள தரவுகளை நாம் பரிசீலித்த போது, 275 அரசியல் கைதிகள் பற்றிய பதிவுகள் உள்ளன. சொலிசிற்றர் ஜெனரல் இது தொடர்பான மேலதிக விபரங்களைக் கோரியுள்ளார்.
குறிப்பாக, அரசியல் கைதிகள் எவ்வளவு காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், எவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அல்லது தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பன பற்றிய விபரங்களை சமர்ப்பிக்குமர்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நான் என்னிடம் இருந்த விபரங்களை வழங்கியுள்ளேன். இந்தக் குழுவின் அடுத்த கூட்டம் வரும் 30ஆம் நாள் நடைபெறும்” என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.