குடி நீர் விஷமானதால் யாழில் 25 மாணவர்கள் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சுமார் 25 பேர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிணற்று நீர் விஷமானதாலேயே இவர்கள் இவ்வாறு சுகயீனமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை பாடசாலைக் கிணற்றில் இனந்தெரியாத சிலர் கிருமிநாசினியைக் கலந்துள்ளமையே இந்த சம்பவத்துக்கு காரணம் என, குறித்த பாடசாலை அதிபரால் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை மாணவர்கள் வழமைபோல் பாடசாலைக்குச் சென்று நீர் அருந்தியுள்ளதோடு, அதில் உயர்தர மாணவன் ஒருவர், அதிபரிடம் சென்று நீரில் கிரிமிநாசினி வாசனை வருவதாக முறைப்பாடு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பின்னரே பாடசாலை தரப்பினரால் விரைந்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.