Breaking News

சம்பூரில் 237 ஏக்கர் காணிகள் உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு!

திருகோணமலை சம்பூரில், பொதுமக்களின் நிலங்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்படையின் பயிற்சி மையம் வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது.

சம்பூரில் இலங்கை கடற்படையின், பயிற்சி நிலையம் அமைந்துள்ள,237 ஏக்கர் காணிகளையும், உரிமையாளர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதையடுத்தே, இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது. கடற்படை வசம் உள்ள 237 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று, கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ அண்மையில் அறிவித்திருந்தார்.

இதையடுத்து, கடற்படைப் பயிற்சி மையத்துக்கு புதிய இடம் ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2007ம் ஆண்டு இலங்கை கடற்படையில் அதிகளவில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட போது, சம்பூரில் கடற்படையின் பியற்சி மையம் அமைக்கப்பட்டது.

எஸ்.எல்.என்.எஸ் விதுர என்று பெயரிடப்பட்ட இந்தக் கடற்படைப் பயிற்சி மையத்தில், ஒரே நேரத்தில் 1000 கடற்படையினருக்குப் பயிற்சிகளை அளிக்கும் வசதிகள் உள்ளன. இதனிடையே, சம்பூரில், பொதுமக்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ள 818 ஏக்கர் காணிகளை வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அறிவித்துள்ளார்.