Breaking News

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரே 13 குறித்து கவனிக்கப்படும் - ஜனாதிபதி

அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டம் தொடர்பான விவகாரம், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடக ஆசிரியர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அண்மையில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், அதற்கு அப்பால் சென்று தமிழர் பிரச்சினையைத் தீர்க்குமாறும், கேட்டுக் கொண்டிருந்தார்.

இதுகுறித்து, நேற்றைய சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி

“13வது திருத்தச்சட்ட விவகாரம், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு எனது அரசாங்கம் இன்னமும் முன்னுரிமை கொடுத்து வருகிறது.

புலம்பெயர் தமிழர்கள் விடயத்தில் புதிய அணுகுமுறை ஒன்று கடைப்பிடிக்கப்படும். முன்னர் இலங்கை  அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்ட அவர், தற்போது எம்முடன் இணைந்து பணியாற்ற விருப்பம் கொண்டுள்ளனர். நாட்டின் அபிவிருத்திக்கு பங்காற்ற விரும்புகின்றனர்.

அண்மையில் லண்டன் சென்றிருந்த போது சில புலம்பெயர் அமைப்புகள் என்னை வந்து சந்தித்திருந்தன. அவர்கள் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கத்துடன் பேசுவதற்கும் விருப்பம் வெளியிட்டனர்” என்றும் தெரிவித்துள்ளார்.