Breaking News

10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சகாதேவன் உண்ணாவிரதம்

எதிர்வரும் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளை கோரிக்கையாக முன்வைத்து போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் சி.வி.சகாதேவன் இன்று வியாழக்கிழமை காலை முதல் யாழ்.பொது நூலகத்துக்கு முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவரது 10கோரிக்கைகளும் வருமாறு;

1.அரசியல் கைதிகள் கடத்தப்பட்டோர் காணாமற்போனோரின் விடுதலை,

2.எல்லை தாண்டும் மீனவர்களின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணுதல்,

3.யுத்தத்தில் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கு இழப்பீடு வழங்குதல்,

4.விதவைகள் அநாதைகள் காயமடைந்தோருக்கான உதவிகள் வழங்கல்,

5.வடக்கு - கிழக்கு பிள்ளைகளின் கல்விக்கு ஏற்ற வேலைவாய்ப்புக்கு உதவிகள் வழங்கல்,

6.இடம்பெயர்ந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு சொந்த காணிகளை கிடைக்கச் செய்தல்,


7.உள்ளூரிலும் சர்வதேசத்திலும் தமிழகத்திலும் அகதிகளாகவுள்ள மக்களின் மீள்குடியேற்றம், தொழில் வீட்டு வசதி ஏற்படுத்தல்,

8.போரில் இறந்தவர்களை நினைவுகூற நினைவுச்சின்னம் ஒன்றையும் நினைவுத்தூபி ஒன்றையும் பிரகடனப்படுத்தல்,

9.ஐக்கிய நாடுகள் பேரவையின் தீர்மானத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தல்,

10.இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை ஏற்படுத்தல் 

இதே வேளை இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகிய இந்த உண்ணாவிரதத்தை எதிர்வரும் சனிக்கிழமை வரை முன்னெடுக்கவுள்ளதாக சகாதேவன் தொிவித்துள்ளாா்.