அகதிகளை இப்போது அனுப்ப வேண்டாம் – மோடியிடம் கோருவாராம் மைத்திரி
தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இப்போதைய சூழ்நிலையில் திருப்பி அனுப்புவது பொருத்தமானதல்ல என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துக் கூறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பிலுள்ள வட்டாரங்களை மேற்கோள்காட்டி, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.அகதிகளை திரும்ப அழைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயங்குவதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
உள்நாட்டில் இடம்பெயர்ந்த 26 ஆயிரம் பேர் இன்னமும் மீளக்குடியேற்றப்படாமல் இருப்பதும், மீள்குடியமர்வுக்கு காணி சுவீகரிப்பு ஒரு பிரச்சினையாக இருப்பதும் முதல் காரணமாக சொல்லப்படுகிறது.
இரண்டாவதாக, மூன்று பத்தாண்டுகளாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்துவிட்ட இலங்கைத் தமிழர்களை அங்கிருந்து திருப்பி இழைப்பது மனிதத்தன்மையற்ற செயல் என்று சிறிலங்கா அரசாங்கம் உணர்கிறது.அவர்கள் உள்நாட்டில் உறவுகளை ஏற்படுத்தியுள்ளனர், தொழில் செய்கின்றனர். பலர் கல்வியைப் பெற்று வருகின்றனர்.
இதனால்,அகதிகளைத் திருப்பி அனுப்பும் விவகாரத்தை மனிதாபிமான விவகாரமாக பார்ப்பதாகவும், கட்டாயமாக திருப்பி அனுப்புதலின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை என்றும் உயர்மட்ட வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.
வரும் 15ம் நாள் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா அதிபருக்கும், இந்தியப் பிரதமருக்கும் இடையிலான பேச்சுக்களில், அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரம், உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்தும் விவகாரம் மற்றும், நீண்டகாலமாக இழுபடும் சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்கும் பணிகளை ஆரம்பிக்கும் விவகாரம் என்பனவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மீன்பிடி விவகாரம் குறித்து இந்தச் சந்திப்பில் ஆழமாக ஆராயப்பட வாய்ப்பில்லை என்றும், சிறிலங்கா அதிபருடன் புதுடெல்லி செல்லும் குழுவில், கடற்றொழில் அமைச்சர் இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, வெளிவிவகார அமைச்சின் செயலர் சித்ராங்கனி வகீஸ்வர ஆகியோரே புதுடெல்லி செல்லவுள்ளனர்.