படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள மக்களின் காணிகளின் விபரங்கள் சேகரிப்பு
வடமாகாணத்தில் படையினரின் பயன்பாட்டில் உள்ள பொதுமக்களிற்குச் சொந்தமான காணிகளின் விபரங்களை மாவட்ட அரச அதிபர்களிடம் மீள்குடியேற்ற அமைச்சு கோரியுள்ளதாக அரசாங்க அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
யுத்த காலத்தில் முப்படையினரின் தேவைக்காக படையினரால் சுவீகரிக்கப்பட்டு தற்போது வரை படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான வீடுகள் காணிகள் என்பவற்றின் விபரங்களை உடன் அனுப்பி வைக்குமாறு மத்திய மீள்குடியேற்ற அமைச்சினால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் மாவட்ட ரீதியாக தனியாருக்குச் சொந்தமான குடியிருப்பு வீடுகள் மேட்டு- நிலங்கள் வயல் நிலங்கள் எனத் தனித்தனியாக விபரம் சேகரிக்கப்பட்டு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் இடம் பெறுவதாக மாவட்ட அரச அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான விவரங்களில் மக்களின் வாழ்விடங்களில் படையினர் நிலை கொண்டுள்ளமையினால் இருப்பிடம் இன்றி அல்லல்படும் மக்கள் தொகையும் கோரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டும் மாவட்ட அரச அதிபர்கள் இதன் பிரகாரம் யாழ். குடாநாட்டில் வலி. வடக்கில் 22 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 6350 ஏக்கர் நிலத்திற்குச் சொந்தமான 13 இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மக்களினதும் குடா நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மக்களின் வாழ்விடங்களில் உள்ள சிறிய முகாம்கள் விபரங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்களிற்கு சொந்தமான கேப்பாபுலவு புதுக்குடியிருப்பு முறிகண்டி போன்ற மக்களின் வாழ்விடங்களில் உள்ள படை முகாம்களின் விபரங்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் பரவிப்பாஞ்சான் போன்ற இடங்களில் உள்ள மக்களின் வாழ்விட விபரங்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இறுதி யுத்தத்தின் பின்பு 5 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தமது இருப்பிடங்களை படையினர் பயன்படுத்துவதனால் இவ் நிலங்களின் உரிமையாளர்கள் தொடர்ந்தும் முகாம்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் அல்லல்படுவதனால் இவர்களின் பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறும் பலரும் கோரிக்கை விடுத்து வரும் சூழலில் இவ்வாறான விபரம் கோரப்பட்டுள்ளமை பலரின் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.