ஆட்சி மாற்றம் என்பதற்காக இனப்படுகொலை இல்லை என்றில்லை! அரியநேந்திரன்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை வரவேற்கின்றோம். அதே வேளை ஆட்சி மாறியுள்ளது என்பதற்காக சர்வதேச விசாரணையோ இனப்படுகொலையோ இல்லை என்றே கருத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் தெரிவித்தார்.
சர்வதேச ரீதியாக சென்றிருக்கின்ற ஜ.நா. விசாரணையானது சம்மந்தப்பட்டவர்கள் தொடர்பாக நீதியான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.
வட மாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட இன அழிப்பு தொடர்பான தீர்மானத்தை வரவேற்கின்றோம். பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை விடுவிக்கப்பட்டதிலிருந்து இப்போது வரை இலங்கையில் இடம்பெற்றது இன அழிப்புதான்.
ஒரு இனத்தை இலக்கு வைத்து அழித்தல் என்பது இனப்படுகொலை தான். ஒரு இனத்தின் பரம்பலை கலை, பண்பாட்டை நிலத்தை குடியிருப்பை திட்டமிட்டு அழிக்கப்படுவதானது இனப்படுகொலையாகும்.
1958 ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது இனக்கலவரத்தை தொடர்ந்து பல படுகொலைகள் எமது மக்களுக்கு எதிராக அனைத்து ஆட்சிக் காலத்திலும் நிகழ்த்தப்பட்டுள்ளன. கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதிக்கு முற்பட்ட காலப்பகுதியில் எமது இலட்சக்கணக்கான மக்கள் அகதியாக்கப்பட்டுள்ளார்கள்.
கொத்துக் குண்டுகள் இரசாயனக் குண்டுகளை பயன்படுத்தி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.இவ்வாறு பல்வேறு பட்ட இனப்படுகொலைக்காக தீர்மானம் நிறைவேற்றிய வடமாகாண சபை முதலமைசருக்கும் தீர்மானத்தை கொண்டு வந்த உறுப்பினருக்கும் அதனை ஆதரித்த உறுப்பினர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.