Breaking News

தேசியக்கொடி ஏற்றாமைக்கு விசாரணையாம்!

இலங்கையின் சுதந்திர தினத்தன்று கூட்டமைப்பு வசமுள்ள நல்லூர் பிரதேச சபையில் இலங்கை தேசியக்கொடி ஏற்றப்படாமை தொடர்பில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

சபையில் எடுக்கப்பட்ட தீர்மானப்பிரகாரம் தமிழர்களது அடிமைச்சின்னமாக கருதி இலங்கை தேசியக்கொடியை ஏற்றுவதில்லையென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொடி ஏற்றப்படாமை தொடர்பில் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினர் தனக்கு அழைப்பு விடுத்துள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பா.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் தனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர், ஏன் கொடி ஏற்றவில்லை என கேட்டனர். சபையின் தீர்மானத்துக்கமைய ஏற்றவில்லை என கூறியபோது, இது தொடர்பில் கொழும்புக்கு விசாரணைக்கு அழைப்போம் அப்போது வர வேண்டும் எனக்கூறி தொலைபேசியை துண்டித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் கொழும்பில் நடைபெற்ற இலங்கை சுதந்திரதின நிகழ்வில் கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் கலந்துகொண்டமை தெரிந்ததே.