Breaking News

வவுனியாவில் ஆரம்ப பாடசாலையில் இராணுவ முகாம்! வெளியேற்றுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

வவுனியா பூவரங்குளம் பூவரசு ஆரம்ப பாடசாலையில் முகாமிட்டு இருக்கும் விசேட அதிரடிப் படையினரை வெளியேற்றுமாறு அரசாங்கத்திடம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த விடயம் குறித்து அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்த விடயங்கள் வருமாறு

யுத்தம் முடிந்ததன் பின்னர் அதாவது 2010 ஆம் ஆண்டில் வவுனியா பூவரசங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள பூவரசு ஆரம்ப பாடசாலையில் விசேட அதிரடிப்படையினர் முகாமிட்டு பாடசாலையின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். அத்துடன் பாடசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் தடையாக இருக்கின்றனர். 

கொழும்பில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள தனியார் காணிகளில் முகாமிட்டிருக்கும் இராணுவத்தினர் அப்புறப்படுத்தப்பட்டு அந்தக் காணிகளை உரியவர்களிடம் வழங்க புதிய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் வாழ்வியலோடு ஒன்றிய பாடசாலையிலிருந்து விசேட அதிரடிப்படையினரை வெளியேற்ற அரசாங்கத்திற்கு இன்னமும் மனம் வராமலிருப்பது கவலையளிக்கிறது. 

முந்தைய அரசாங்கம் காதுகொடுத்துக் கேளாதிருந்த எமது கோரிக்கைகளை புதிய அரசாங்கம் செவிமடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளேன். இது தொடர்பாக பொலிஸ், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சருக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். 

இரண்டு ஏக்கர் விஸ்தீரணமுள்ள மேற்படி பாடசாலைக் காணி, கட்டடம், கிணறு, மலசலகூடம் என்பவற்றை விசேட அதிரடிப் படையினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால் இங்கு கல்விகற்கும் சுமார் 125 இற்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைகின்றன. அத்துடன் பாடசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளும் தடைப்படுகின்றன என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.