Breaking News

இலங்கை அரச புலனாய்வுச் சேவை இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது.

இலங்கையின் பிரதான புலனாய்வு அமைப்பான அரச புலனாய்வுச் சேவையை மிஞ்சி, இராணுவப் புலனாய்வுப் பிரிவு வளர்ச்சி பெற்றுள்ளது என்றும், அண்மைய இராணுவக் கட்டமைப்பு மாற்றங்களின் போது, இராணுவப் புலனாய்வுத் துறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

அண்மையில் இலங்கையின் இராணுவக் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உயர் மட்டத்தில் மாற்றங்கள் ஏதும் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.

கடந்த சில ஆண்டுகளில்  இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பற்றாலியன்களின் எண்ணிக்கை  ஒன்றில் இருந்து 7 ஆக அதிகரித்துள்ளது. வடக்கில்  இராணுவப் புலனாய்வுப் பிரிவு பல்வேறு சர்ச்சைகளின் மையமாக இருந்து வருகிறது.

நாட்டின் பிரதான புலனாய்வுச் சேவையான அரச புலனாய்வுச் சேவைக்கு நிகராகச் செயற்படுவதாக இதன் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தற்போது இராணுவப் புலனாய்வுப் பிரிவு, அரச புலனாய்வுச் சேவையை விஞ்சி நிற்கிறது.

இதனால் காவல்துறையினரைக் கொண்ட, அரச புலனாய்வுச் சேவை இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் சுட்டிக்காட்டியுள்ளது.