Breaking News

அத்துமீறி வரும் இந்திய மீனவா்களை நிறுத்தக்கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

இந்திய மீனவர்களின் அத்துமீறலை நிறுத்தக்கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று  நடத்தப்பட்டுள்ளது.

 மன்னார் மாவட்ட மீனவ சம்மேளனம் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மன்னார் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளும், மீனவர்களும் கலந்து கொண்டனர். 

இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து தொழிலில் ஈடுபடுவதால் மன்னார் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதுடன் மீனவர்களின் வலை மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் நாசமாக்கப்படுகின்றன என்றும், இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி இலங்கை மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய பிரதமருடன் பேசி, இந்திய மீனவர்களது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு நல்ல தீர்வு ஒன்றை பெற்றுத்தரவேண்டும் என வலியுறுத்தியும் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது

 மன்னார் பிரதான பாலத்தில் இருந்து ஆரம்பமான பேரணி, மன்னார் நகரத்தினூடாக மன்னார் பொது விளையாட்டரங்கை அடைந்து, அங்கிருந்து மன்னார் மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது. இதன்போது மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன் மீனவர்கள் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மீனவப்பிரதிநிதிகள் மாவட்ட செயலரிடம் கையளிக்க சென்றனர். எனினும் ஒருவர் மட்டுமே உள்ள செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மன்னார் மேலதிக அரசாங்க அதிபரிடம் மனு கொடுக்கப்பட்டது.