புலிகளின் நிதிக்கு நடந்தது என்ன? – விசாரணைக்கு ரணில் அழைப்பு
போர் முடிவுக்கு வந்த பின்னர், விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்பது குறித்து புதிய அரசாங்கம் விசாரணைகளை நடத்தும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாவனெல்லையில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,
“கடந்த பல ஆண்டுகளில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்படும்.அவர்களின் நிதி மற்றும் முன்னைய அரசாங்கத்துடன் வைத்திருந்த தொடர்புகள் குறித்தும் விசாரிக்கப்படும்.
விடுதலைப் புலிகளின் நிதிக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் அறிந்து கொள்ள விரும்புகிறது.ஊழல் விசாரணையின் ஒரு பகுதியாக இது இடம்பெறும்.விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக முன்னைய அரசாங்கம் எப்போதும் எம்மீது குற்றம்சாட்டி வந்தது.
ஆனால், அவர்கள் தான் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தனர்.விடுதலைப்புலிகளின் கப்பல்கள் குறித்த தகவல்கள் பெறப்பட்டது, போர் முடிந்த பின்னர், கண்டெடுக்கப்பட்ட புலிகளின் தங்கம் மற்றும் பணத்துக்கு என்ன நடந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும்.
வடக்கிலுள்ள மக்களிடம் இருந்து இதுதொடர்பான ஆதாரங்கள் திரட்டப்படும்.
இது ஒரு பெரியளவிலான விசாரணையாக இருக்கும்.கடந்த தேர்தலில் விடுதலைப் புலிகளைப் பயனபடுத்தி வடக்கிலுள்ள மக்களை வாக்களிக்காமல் தடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
குமரன் பத்மநாதனை இந்தியாவிடம் கையளிக்கவும் முன்னைய அரசாங்கம் தவிறிவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.