Breaking News

யாழ்.தீவகப்பகுதியில் மூடியுள்ள கிணறுகள் தொடர்பில் சந்தேகம்

இலங்கையின் வடக்கே யாழ் தீவகப்பகுதியாகிய சுருவில் மண்டைதீவு போன்ற மிள்குடியேற்றப் பகுதிகளில் பல கிணறுகள் மூடிக்கிடப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என உள்ளூர் மக்கள் தம்மிடம் தெரிவித்ததாக மகளிர் விவகாரத் துணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்  தெரிவித்துள்ளார்.

யாழ் தீவகப் பகுதிகளுக்கு விஜயம் செய்த அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்

அந்தக் கிணறுகளில் அப்பிரதேசங்களில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படுபவர்கள் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கலாம் எனும் ஐயப்பாடுகள் உள்ளன என்று மக்கள் கருதுவதாகவும் அவர் கூறுகிறார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவசரக் கடிதம் ஒன்றையும் தான் பொலிஸ் மாஅதிபருக்கும் எழுதியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் அந்தக் கிணறுகளை தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும், யாழ் தீவகப்பகுதிகளில் இன்னும் அச்சத்துடன் வாழ்கின்ற மக்களின் அச்சத்தைப் போக்கி இயல்பு வாழ்க்கை வாழ வழி செய்ய வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் கோரியிருக்கின்றார்.

அதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருப்பதுடன், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு இதனைக் கொண்டு செல்லவிருப்பதாகவும் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.