சுமந்திரனின் உருவ பொம்மை எரிக்கப்பட்டமை பிழையான விடயம் - வடமாகாண சபை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவ பொம்மை எரிக்கப்பட்டமை பிழையான விடயமென வடமாகாண சபையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யாழ். நகரில் கடந்த 21ஆம் திகதி காணாமற் போனவர்களின் உறவினர்கள் நடத்திய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுமந்திரனின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இந்நிலையில், சுமந்திரனின் உருவ பொம்மை எரிக்கப்பட்டமை தவறான விடயமென நேற்றைய அமர்வில் வட மாகாண கடற்றொழில் அமைச்சர் சபையில் சுட்டிக்காட்டியதோடு. குறித்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குறிப்பிடுகையில், உருவபொம்மை எரிப்பை யார் செய்தார்கள் என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் சுமந்திரன் மீதுள்ள அதிருப்தியால் உணர்ச்சிவசப்பட்ட காணமல்போனவர்களின் உறவினர்கள் இதனை செய்திருக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்ட மாகாண சபை உறுப்பினர் அன்டனி ஜெயநாதன், இது தற்செயலாக நடைபெற்ற சம்பவம் அல்லவெனவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.