அரசியலில் ஈடுபட்ட அனைத்து இராணுவ அதிகாரிகளும் இடைநிறுத்தப்படுவர் - ராஜித
''ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து, எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் இராணுவப் புரட்சி செய்யத் திட்டமிட்டிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், இராணுவ அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விசாரணைகளின் பிரகாரம் அவர்களைக் கைது செய்யவுள்ளோம். அது மட்டுமல்லாது, அரசியலில் ஈடுபட்ட அனைத்து இராணுவ அதிகாரிகளையும் ஒட்டு மொத்தமாக இராணுவத்திலிருந்து இடைநிறுத்துவோம்.'' இவ்வாறு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
மேலும் ஏப்ரல் மாதமளவில் இராணுவப் புரட்சிக்குச் சதி செய்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் அவருடன் நெருங்கிச் செயற்பட்ட இராணுவ அதிகாரிகள் தொடர்பில் எமக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. போருக்குப் பின்னர் இலங்கையில் தலைதூக்கிய வெள்ளைவான் கலாசாரம், வடக்கில் காணாமல் போதல் மற்றும் தெற்கில் பேரினவாதச் செயற்பாடுகள் அனைத்துக்கும் இவர்களே காரணமாக இருந்துள்ளனர்.
இவர்களுக்கு விசுவாசமான 400 இராணுவச் சிப்பாய்களைக் கொண்ட புதிய இராணுவப் பிரிவை ஆரம்பித்துள்ளனர். இப் படையினருக்கு மேலதிக பயிற்சிகள் மாதுரு ஓயா இராணுவ முகாமில் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நன்கு தமிழ் மொழி கற்பிக்கப்பட்டு வடக்கில் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். அண்மைக் காலமாக வடக்கில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு இவர்களே காரணமாக இருந்துள்ளனர்.
இவர்களது அடுத்த கட்டத் திட்டமாக, நாட்டில் சிறு சிறு குழப்பங்களைத் தூண்டிவிட்டு பின்னர் ஏப்ரல் மாதமளவில் அரசைக் கவிழ்ப்பதற்குத் திட்டம் வகுத்திருந்தனர். ஆனால், இவர்களது திட்டங்கள் அனைத்தும் தற்போது அம்பலமாகியுள்ளன. இதற்கமைய நாங்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் இவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர். அத்துடன் இதனுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளையும் நாங்கள் ஒட்டுமொத்தமாக இடை நிறுத்தவுள்ளோம்.'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.