மஹிந்தவை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் - சம்பிக்க
இலங்கையில் இடம்பெற்ற பாரிய ஊழல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதான சந்தேகநபர் என்ற அடிப்படையில் அவர் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படவேண்டும் என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்தார்.முன்னைய ஆட்சிக்காலத்தில் பாரிய ஊழல்களில் தொடர்புடையவர்களுக்கு நடப்பு அரசாங்கம் உரிய தண்டனைகளை பெற்றுக்கொடுக்கவேண்டும்.
மேல் மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரையில் உள்ளவர்கள் இந்த விடயத்தில் தண்டிக்கப்படவேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
சிலர், தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்கொள்வதற்காக நடப்பு அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க முயற்சிக்கின்றார்கள்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை உள்ளதாக தெரிவித்து வெளியிடப்பட்ட ஆவண விடயத்தில் தொடர்புடைய அனைவரும் கைதுசெய்யப்படவேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.