Breaking News

ஜெனிவாவை சமாளிக்க மங்கள சமரவீர தீவிர முயற்சி

வெளிநாடுகளுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைப் பிற்போடுவதற்கு ஆதரவு திரட்டவும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தொடர் வெளிநாட்டுப் பயணங்களை ஆரம்பித்துள்ளார்.

பிரித்தானியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றுக் காலை லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார்.அவர் லண்டனில் பிரித்தானியாவின் உயர் மட்ட அரசாங்கத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு அவர், இந்த வார இறுதியில், அமெரிக்கா செல்வார்.வரும் வியாழக்கிழமை அவர் வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இந்தச் சந்திப்பை அடுத்து, வொசிங்டனில் தேசிய ஊடக கழகத்தில், நடைபெறும் வரவேற்பில் கலந்து கொள்ளும் மங்கள சமரவீர, இலங்கை- அமெரிக்க உறவுகள் குறித்தும், சிறப்புரை நிகழ்த்தவுள்ளார்.அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு, மங்கள சமரவீர நேரடியாக புதுடெல்லி செல்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் 15ம் திகதி, இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், அவர் புதுடெல்லியில் இணைந்து கொள்வார்.இந்தியப் பயணத்தின் பின்னர், இந்த மாத இறுதியில், சீனாவுக்குச் செல்லவும் மங்கள சமரவீர திட்டமிட்டுள்ளார்.