உலகக்கிண்ண அரங்கில் ஆஸி.க்கு அடுத்த படியாக இந்தியா ஆதிக்கம்
அந்த அணி 1987, 1999, 2003, 2007ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அதிகபட்சமாக 55 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் உலகக்கிண்ண வரலாற்றில், அவுஸ்திரேலிய துடுப்பாட்டக்காரர்கள் 16,165 ஓட்டங்களையும்,பந்துவீச்சாளர்கள் 556 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
அதே போல தொடர்ச்சியாக 34 போட்டிகளில் வெற்றி பெற்ற சாதனையையும் கொண்டுள்ளது. உலகக்கிண்ண அரங்கில் மிரட்டல் அணியாக அவுஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தும் அதே வேளை, அதற்கு அடுத்த இடத்திற்கு இந்தியா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் என பல அணிகள் மோதிக் கொள்கின்றன.
அந்த வகையில் உலக்கிண்ண தொடரில் அணிகளின் செயல்பாட்டை வைத்து பார்க்கும் போது மூன்று முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து அணியால் ஒரு முறை கூட கிண்ணம் வெல்ல முடியவில்லை. அதே போல மூன்று முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள், தலா 2 முறை கிண்ணம் வென்றன. ஆறு முறை அரையிறுதிக்கு தகுதி பெற்ற பாகிஸ்தான் அணி, இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு சென்றது. இதில் ஒரு முறை கிண்ணம் வென்றது.
நியூசிலாந்தை பொறுத்தவரை 8 முறை லீக் சுற்றை கடந்து ‘நாக்–அவுட்’ சுற்றுக்கு முன்னேறிய பெருமை உண்டு. அதிக வெற்றிகள் பெற்ற அணிகள்:- உலகக்கிண்ணத்தில் அதிக வெற்றி பெற்ற அணிகள் வரிசையில் அவுஸ்திரேலியாவுக்கு (55 வெற்றி) அடுத்து, நியூசிலாந்து (40), இந்தியா (39), இங்கிலாந்து (39), மேற்கிந்திய தீவுகள் (38), பாகிஸ்தான் (36), இலங்கை (31), தென் ஆப்ரிக்கா (30) அணிகள் உள்ளன.
‘நாக்–அவுட்’ சுற்றில் அதிக வெற்றி பெற்ற அணிகள் வரிசையில் ஆஸ்திரேலியா (10 வெற்றி) முன்னிலை வகிக்கிறது. இதனை தொடர்ந்து இந்தியா (7), இலங்கை (6) ,மேற்கிந்திய தீவுகள் (6), பாகிஸ்தான் (4), இங்கிலாந்து (3), நியூசிலாந்து (1) அணிகள் உள்ளன. ‘நாக்–அவுட்’ சுற்றில் ஒரு வெற்றி கூட பெறாத அணி என்ற மோசமான சாதனையை தென் ஆப்ரிக்கா பெற்றுள்ளது. இதன் படி உலகக்கிண்ண அரங்கில் அவுஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக சிறந்த அணியாக இந்தியா இருக்கிறது.