Breaking News

ஐ.நா அறிக்கை சமா்ப்பிப்பு தொடா்பில் யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி

ஸ்ரீலங்கா மீதான ஐ.நா விசாரணை அறிக்கை மார்ச்சில் வெளியிடப்படாமல் பிற்போடப்பட்டுள்ளதைக் கண்டித்து யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென சங்கத்தின் தலைவர் ஆர்.இராசகுமாரன் தெரிவித்துள்ளார்.இந்தப் போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று யாழ். பல்கலைக்கழக பொது நூலகத்தில் இன்று நடைபெற்றது.

இதில், ஆசிரியர் சங்கம் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஸ்ரீலங்கா அரசினால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், தொடர்பாக, சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டுமென இந்த கலந்துரையாடலில் உரையாற்றிய யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

இந்நிலையில், அறிக்கையை சமர்ப்பிக்கும் நடவடிக்கை பிற்போடப்பட்டதை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இதற்கமைய ஐ.நா அறிக்கை வெளியிடப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 9 மணிக்கு யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பமாகும் ஆர்ப்பாட்ட பேரணி, ஐ.நா அலுவலகம் வரை சென்று மகஐரொன்றையும் கையளிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.