மகிந்த ஆட்சியில் பதுக்கிய சொத்துக்களை மீட்க உலக வங்கியுடன் இணைந்து நடவடிக்கை
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியால் முறைகேடான வகையில் சேகரிக்கப்பட்டு, உலகின் பல்வேறு நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கை குறித்து உலக வங்கியுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
அடுத்த வாரம் அமெரிக்கா செல்லவுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இது தொடர்பாக திருடப்பட்ட சொத்துக்களை மீட்கும் உலக வங்கியின் அலகின் அதிகாரிகள் குழுவை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இந்தப் பேச்சுக்களில் சட்டத்தரணி வெலியமுனவும் கலந்து கொள்ளவுள்ளார்.
உலக வழங்கியின் சொத்துக்களை மீட்கும் அலகின் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, வெளிநாடுகளில் சொத்துக்களை சேகரித்து வைத்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பட்டியல் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் கையளிக்கவுள்ளது.
இதனிடையே, சிறிலங்காவில் வெளிப்படையான ஜனநாயக சமூகத்தை ஏற்படுத்த உதவப் போவதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுசன் ரைஸ் தெரிவித்திருந்தார்.
மேலும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கையையும் அமெரிக்கா தனது தேசிய பாதுகாப்புத் தந்திரோபாயங்களில் ஒன்றாக வகைப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்க்கது.