நீர்த்துப் போகுமா ஐ.நா விசாரணை
தொடர்ந்து பல்வேறு மாற்றங்களுக்கு வழியேற்படுத்திக்கொண்டுசெல்கின்றது. நாட்டின் ஒவ்வொரு தினமும் பரபரப் பான சூழலாகவே காணப்படுகின்றது.
மக்களுக்கான நிவாரணங்கள், 100 நாள் வேலைத்திட்டங்கள், அரசியலமைப்பு திருத்தயோசனைகள் ஊழல் குற்றச்சாட்டுக்கள் அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கான தயார் நிலைகள் என நாட்டின் அரசியல் களம் சூடாகவே உள்ளது. அத்துடன் ஒவ்வொரு நாளும் ஏதாவது பரபரப்பான செய்திகள் வந்த வண்ணமே உள்ளன.
பிரதான அரசியல் கட்சிகளும் சிறுபான்மை அரசியல் கட்சிகளும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு தம்மை தயார்படுத்தும் பாரிய முயற்சிகளிலேயே ஈடுபட்டுள்ளன. சுதந்திரக் கட்சியை பொறு த்தவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் தாங்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைப்போம் என்று கூறிவருகின்றது.
அதேநேரம் தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியும் அடுத்த தேர்தலில் ஆட்சியை கைவிடும் எண்ணத்தில் இல்லை. எப்படியாவது அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்பதில் பாரிய காய்நகர்த்தல்களை முன்னெடுத்துவருகின்றது. அதில் முக்கியமாக கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை தமது பக்கத்துக்கு இழுக்கும் முயற்சியில் ஐக்கிய தேசிய கட்சி ஈடுபட்டுவருகின்றது.
அந்தவகையில் அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை முன்வைத்த இடைக்கால வரவு–செலவுத்திட்டத்தில் சாதாரண மக்களுக்கான பல்வேறு நிவாரணத் திட்டங்கள் அடங்கியுள்ளன. இவ்வாறான நாட்டின் சூடான அரசியல் ஆடுகளத்தில் சர்வதேச உறவுகளும் முக்கியத்துவம் பெறாமல் இல்லை.
புதிய அரசாங்கமானது சர்வதேச உறவை கட்டியெழுப்புவதில் பாரிய ஆர்வத்தை வெளிக்காட்டிவருகின்றது. புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்ற அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு தலைவலியை கொடுக்கும் மிக முக்கிய காரணியாக ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் இலங்கை விவகாரம் குறித்த விசாரணை செயற்பாட்டை குறிப்பிடலாம். அதன்படி அந்த ஜெனிவா மனித உரிமை பேரவையின் விசாரணை செயற்பாட்டை நீர்த்துப்போகச் செய்யும் வேலைத்திட்டத்தில் புதிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று கூறலாம்.
அதாவது மனித உரிமை மீறல்கள் குறித்து உள்ளக விசாரணையை நடத்துவதற்கு தயாராக இருப்பதாகக் கூறியுள்ள புதிய அரசாங்கம் சர்வதேச விசாரணை அவசியமில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றது. இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வதேச உறவுகளுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஜயந்த தனபால உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான மூன்றாவது பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் பிரேரணையை எதி ர்த்து 12 நாடுகளும் வாக்களித்தன. அத்துடன் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்திருந்தன.
இந்தப் பிரேரணையின் ஊடாக இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் விசாரணை நடத்தும் என அறிவிக்கப்பட்டது. அதாவது நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப் பகுதியில் இலங்கையில் இருதரப்பினராலும் இழை க்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் விரிவான சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டே இலங்கைக்கு எதிரான பிரேரணை கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான விசாரணை குறித்த வாய்மூல அறி க்கை சமர்ப்பிக்கப்பட்டது. எவ்வாறெனினும் கடந்த அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பிரேரணையை முழுமையாக நிராகரித்ததுடன் விசாரணைக்கும் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என்று திட்டவட்டமாக கூறிவந்தது.
இலங்கையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை எந்தவொரு விசாரணையையும் முன்னெடுக்க அனுமதிக்கக்கூடாது என்று பாராளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 134 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை குறித்த விசாரணையை நடத்த 12 பேர் கொண்ட குழுவை நியமித்ததுடன் மூன்று நிபுணர்களையும் நியமித்திருந்தார்.
அந்தவகையில் நிபுணர் குழுவில், சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளவரும், பின்லாந்து அரசின் முன்னாள் அதிபருமான மார்ட்டி அதிசாரி, நியூசிலாந்தின் முன்னாள் ஆளுநர் சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கீர் ஆகிய மூன்று விசேட நிபுணர்கள் செயற்பட்டிருந்தனர்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் விசாரணை ஆணையாளர்கள் இலங்கை வருவதற்கான அனுமதி கோரப்பட்டிருந்தபோதும் அதற்கான அனுமதி கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஜெனிவாவில் தலைமையகத்தைக் கொண்டிருந்த விசாரணையாளர்கள் இலங்கை குறித்த விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் இந்த விடயத்தை தற்போது ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அதன் பின்னர் அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது ஜெனிவா மனித உரிமை அலுவலகத்தின் விசாரணை குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது மனித உரிமை மீறல்கள் இட ம்பெற்றிருந்தால் அவை தொடர்பில் உள்ளக விசாரணையை முன்னெடுக்கத் தயார் என்றும் சர்வதேச விசாரணை அவசியமில்லை என்றும் இலங்கை தரப்பில் அமெரிக்காவுக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய நிலையில் புதிய அரசாங்கத்தின் இந்த முயற்சி பலனளிக்கும் என்றே கூறப்படுகின்றது.
காரணம் கடந்த அரசாங்கத்தின்போது அரசாங்கத் தரப்பினருடனான சர்வதேச சமூகத்தின் தொடர் முரண்பாடுகளின் காரணமாகவே இறுதியில் இலங்கையை இறுக்கிப் பிடிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. காரணம் இலங்கையின் கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் எக்காரணம் கொண்டும் சர்வதேச சமூகத்துடன் இசைவாக்கத்துடன் பயணிக்கவில்லை ஏட்டிக்குப் போட்டியான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்ததுடன் எப்போதும் இலங்கைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையில் முரண்பாடான நிலையே நீடித்து வந்தது.
அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஐக்கிய தேசிய கட்சி இவ்வாறு ஏட்டிக்குப் போட்டியாக செயற்பட்டு சர்வதேசத்தை வெற்றிகொள்ள முடியாது என்று அறிவுரை கூறிவந்தது. ஆனால் முன்னைய அரசாங்கம் தொடர்ந்து சர்வதேசத்துடன் முரண்பாடான போக்கை நீடித்தது.மேற்கு நாடுகள் விருப்பமற்ற வகையிலான முன்னைய அரசாங்கத்தின் சில நாடுகளுடனான நெருங்கிய தொடர்புகளும் மேலும் நிலையை சிக்கலுக்குள்ளாக்கின.
முன்னாள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது அவருக்கு மாப்பிள்ளை பேசும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருந்தது. எனவே அப்போதைய அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்பை காட்டும் வகையில் விசாரணை செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன என்ற கருத்தும் நிலவியது. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்துள்ளது. எந்தவிடயத்தையும் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வரலாம் என்ற எண்ணம் சர்வதேச சமூகத்துக்கு உருவாகும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இந்நிலையில் புதிய அரசாங்கத்தின் முயற்யில் ஜெனிவா மனித உரிமை அலுவலகத்தின் விசாரணை செயற்பாடுகள் நீர்த்துப் போகும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த விவகாரம் குறித்து தற்போதைய அரசாங்கம் உருவாக்கப்படுகின்றமைக்கு பாரிய பங்களிப்பை வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைதியாக இருக்கின்றது.
முன்னைய அரசாங்கத்தின்போது மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தனது நிலைப்பாட்டை தமிழ்க் கூட்டமைப்பு கூறிவந்தது. தற்போது இந்த விடயம் குறித்து உத்தி யோகபூர்வமாக எதுவும் தெரிவிக்கப் படாமல் உள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபாலவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியபோது கூட சர்வதேச விசாரணை விவகாரம் குறித்து எந்த விடயமும் முன்வைக்கப்படவில்லை.
எவ்வாறெனினும் புதிய அரசாங்கத்தின் அணுகுமுறையில் ஜெனிவா மனித உரிமை அலுவலகத்தின் இலங்கை குறித்த விசாரணை நீர்த்துப்போகச் செய்யப்பட லாம். அதற்கான சாத்தியங்கள் உள்ளன. ஆனால் அதன் காரணமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அநீதிக்கு உட்படு த்தப்படக்கூடாது. சர்வதேச சமூகங்கங்கள் தமது அரசியல் தேவையை நிறைவேற்றிக்கொள்ளும்ம முயற்சியில் இலங்கையில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பக டைக்காய்களாக பயன்படுத்த முயற்சிக் கக்கூடாது.
-ரொபட் அன்டனி -