இலங்கைக்கு வழங்கப்படும் கால அவகாசம் இன அழிப்பை ஊக்குவிக்கும் - ரவிகரன்
இலங்கைக்கு வழங்கப்படும் கால அவகாசம் தமிழகளுக்கு எதிரான இன அழிப்பை ஊக்குவிக்கவே பயன்படும் என வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் அமெரிக்க பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கும் உறுப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவில் ரவிகரனின் இல்லத்தில் நேற்று இடம்பெற்து.அதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். சந்திப்பில் அமெரிக்க தூதரக அரசியல் அதிகாரி ஜோசப் ஸ்காலர் மற்றும் USAID அதிகாரி ஜேசன் அப்லான் ஆகியோர்கலந்து கொண்டனர்.
குறித்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன. மேலும் தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாணசபையில், "இன அழிப்பு" தீர்மானம் முழு ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. " 60 ஆண்டுகளாக இங்கே தமிழர்களுக்கு எதிராக இன அழிப்பு நடைபெற்று வருகிறது என்பதை ஆதாரங்களுடன் தீர்மானமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை தமிழர்களின் ஒருமித்த அதிகாரபூர்வமான குரலாக அங்கீகரித்து, இங்கு நடந்ததை வெறுமனே மனித உரிமை மீறல் என்றோ போர்க்குற்றம் என்றோ மட்டுப்படுத்தி அடையாளப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். யுத்தம் முடிவடைந்தும் இராணுவத்தினர் இன்னும் அகற்றப்படவில்லை. மாறாக எனது இல்லத்தில் கடற்படைச் சிப்பாய் இராணுவத் தளபாடம் இருக்கிறதா ?என சோதனை செய்ய வருமளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. அத்துடன் அபகரிக்கப்பட்ட தமிழர் நிலங்களை விடுவிப்பதற்கு தற்போதைய அரசிடம் நீதியான அணுகுமுறை இல்லை.
மத அடையாளங்கள் திணிப்பு தொடர்பில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த தேர்தலில் நடந்தது ஆள் மாற்றம் மட்டுமே என தெளிவாகியுள்ளது. இந்தநிலையில் சர்வதேச விசாரணை அறிக்கையை வெளியிடாமல் இலங்கைக்கு கொடுக்கும் கால அவகாசமானது தமிழர்களுக்கெதிரான இன அழிப்பை ஊக்குவிக்கவே பயன்படப்போகிறது என்று அமெரிக்க பிரதிநிதிகளிடம் நேரில் தெரிவித்தார் ரவிகரன்.
மேலும் வேலை வாய்ப்பின்மை, உள்வீதிகள் செப்பனிடப்படாமை உள்ளிட்ட பூர்த்தி செய்யப்படாத அபிவிருத்தி விடயங்கள், மக்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகள் பூர்த்தியக்கப்படாத பாடசாலைகள் பலவற்றின் நிலை உள்ளடங்கலாக பல விடயங்கள் பற்றி கலந்துரையாடபட்டிருப்பதாக ரவிகரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.