யாழ்.பல்கலையின் பேரணிக்கு அனைத்து தமிழ் மக்களும் கலந்துகொள்ள வேண்டும் - சுரேஸ்
நாளை செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரிய சங்கம், பல்கலைக்கழ ஊழியர்கள் மற்றும் மாணவர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து நடத்தும் கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து தமிழ் மக்களும் ஒற்றுமையுடன் கலந்துகொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
நீர்வேலியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்புக் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
பல்கலைக்கழக சமூகம் நடத்தும் கவனயீர்ப்புப் போராட்டம் சாதாரணமான போராட்டமல்ல. ஜ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கும் இலங்கையில் இருக்கக் கூடிய அரசியல் தலைவர்களுக்கும் தமிழ் மக்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவே இந்தப் போராட்டம் அமையும். இலங்கை அரசு கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக இலங்கை குறித்த போர்க்குற்ற விசாரணை அறிக்கையைக் காலதாமதப்படுத்த ஜ.நா. சபை ஒப்புக்கொண்டுள்ளது.
இந்நிலையில் அந்த அறிக்கையை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் வெளியிட கவுன்ஸில் தீர்மானித்துள்ளது. எனவே ஐ.நா. சபையின் இந்த நடவடிக்கைக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் யாழ் பல்கலைக்கழக சமூகத்தவர்களால் நடத்தப்படும் போராட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். நாம் இனியும் மௌனமாக இருந்தால்,அதுவே அவர்கள் செய்வது எல்லாவற்றையும் ஏற்பதாக அமைந்துவிடும் என தெரிவித்தார்.
இதேவேளை, புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தபோது, இராணுவத்தினரின் பயன்பாட்டில் இல்லாத அல்லது தேவையற்ற காணிகளை பொது மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த்திருந்தார். இதனை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது.
பொதுமக்களின் அனைத்துக் காணிகளும் விடுவிக்கப்படவேண்டும் என்றே நாம் வலியுறுத்திவருகிறோம். இதனை மீள்குடியேற்ற அமைச்சரும் பிரதமரும் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அத்துடன், தமிழர் பகுதிகளை சிங்கள பகுதிகளாக்கும் நடவடிக்கைகளையே கடந்த கால அரசுகள் மேற் கொண்டன. தற்போது உள்ள அரசாங்கமும் முன்னைய அரசாங்கத்தின் வழிகளையே பின்பற்றிவருகிறது போலத் தோன்றுகிறது.
கடந்த அரசு மன்னார், வவுனியா பகுதிகளில் சிங்கள் அரசாங்க அதிபர்களை நியமனம் செய்தது. இதேபோல் நெடுக்கேணி பிரதேச செயலகத்தில் பத்து லிகிதர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். இவ்வாறான நியமனங்களுக்கு நாம் எதிர்ப்புத் தெரிவித்துவந்தோம். புதிய அரசிடம் இந்த நியமனங்களைத் தவிர்க்கவும் கோரினோம். ஆனால் இந்த அரசும் இதனை கருத்தில் கொள்ளவில்லை.
பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழும் நெடுங்கேணி பகுதியில் சிங்கள கிராம அலுவலர் ஒருவரை தற்போது நியமனம் செய்துள்ளார்கள். ஏற்கனவே திட்டமிட்டபடி, நெடுங்கேணியின் ஒரு புகுதியையும் முல்லைத்தீவின் ஒரு பகுதியையும் இணைத்து வெலி ஒயா என்ற புதிய பிரதேச செயலாளர் பிரிவை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகளை அரசு உடன் நிறுத்தவேண்டும். தமிழ் மக்களுடைய காணிகளை சிங்கள மயப்படுத்தல், தமிழ் பகுதிகளை சிங்கள பகுதிகளுடன் இணைத்தல் போன்ற நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும். எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் தெரிவித்தார்.