Breaking News

ஐ.நா. விசாரணை பிற்போடப்பட்டமை மோசமான விளைவை ஏற்படுத்தும் - குணதாச அமரசேகர

ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கை போர் குற்றம் தொடர்பான அறிக்கை பிற்போடப்பட்டமை நாட்டிற்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என கூறும் தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் தலைவர் குணதாச அமரசேகர எதிர்க்கட்சி தலைவர் வெளிவிவகார அமைச்சர் மற்றும் வடமாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகள் குறித்தும் கடுமையாக விமர்சித்தார். 

கொழும்பு பொரளையில் அமைந்துள்ள தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ஜெனிவாவில் மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்த இலங்கை போர் குற்றம் தொடர்பிலான விசாரணை அறிக்கையானது பிற்போடப்பட்டுள்ளமை வடக்கிலுள்ள பிரிவினை வாதிகளுக்கே நன்மை தரும் என்பதை அறிந்தும் வெளிவிவகார அமைச்சர் மேற்படி அறிக்கையினை பிற்போட வேண்டும் என்ற தமது கோரிக்கையை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். 

அது போன்றே வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் புதிய அரசு உருவான பின் ஓமந்தை சோதனை நிலையம் அகற்றல் வடக்கின் அதிகாரங்களை பெற்றுக்கொள்ளல் போன்ற தேவைகளை பூர்த்தி செய்து கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து இப்போது இனப்படுகொலை பிரேரணையையும் நிறைவேற்றிக்கொண்டு கூட்டமைப்பின் தலைவர் பதவி மீது இலக்கு வைத்துள்ளார். அதனையும் விரைவில் நிறைவேற்றிக்கொள்ள புதிய அரசு அவருக்கு சந்தர்ப்பம் வழங்கும்.

அதுமட்டுமல்லாது அவரது அடுத்த தேவையான பலாலி விமான நிலையத்தை அண்மித்த பிரதேசங்களில் வெளிநாடு சென்றுள்ள விடுதலை புலி உறுப்பினர்களை குடியமர்த்தும் திட்டமும் விரைவில் பூர்த்தியாகவுள்ளது. இதற்கும் ரணில் சந்திரிக்கா மங்கள போன்றவர்கள் முன்னின்று உதவுவர் என்பதில் சந்தேகமில்லை. 

இவ்வாறான நிலையில் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டுள்ளதன் பின்பு அமெரிக்கா மற்றும் விக்கினேஸ்வரன் போன்ற பிரிவினை வாதிகளின் சூழ்ச்சி உள்ளது என்பதை அறிந்தும் எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டுள்ளமையை வரவேற்றுள்ளார். அவர் போன்றவர்கள் எதிர்க்கட்சி பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள் அந்த பதவியில் மஹிந்தவை அமர்த்துவதே எமது தேவை. அதுவே நாட்டு மக்களினதும் தேவை என்பதை நுகேகொடையில் திரண்ட மக்கள் கூட்டத்தின் மூலம் அறிய முடிந்தது. 

இது தொடர்பில் எமது நாட்டில் ஜனாதிபதி என்ற பெயரில் உள்ள பொம்மையும் அறியாது இருப்பதே எமக்கு வருந்தக்கூடிய காரணமாக அமைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.