விசாரணை அறிக்கையை பிற்போடுங்கள்- இலங்கை அரசு கோரிக்கை
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போடுமாறு சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.
இந்த தகவலை வொசிங்டனில் தெரிவித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.இன்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை சந்திப்பதற்காக, நேற்று வொசிங்டன் வந்து சேர்ந்த அவர், அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் பங்கேற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.
இதன் போது அவர், உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நாவின் விசாரணை அறிக்கையை வெளியிடுவதை சில மாதங்களுக்குப் பிற்போடுமாறு சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளதாக தெரிவித்தார்.
இந்த விவகாரத்தைக் கையாளும் பொறிமுறை ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கவுள்ளதாகவும், அதுவரை இந்த அறிக்கையை வெளியிடாமல் தவிர்க்கும் படி கோருவதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.
“முந்தைய அரசாங்கம் போல, எத்தகைய மீறல்களும் நடக்கவில்லை என்று மறுக்கும் நிலையில் நாங்கள் இல்லை. அத்தகைய மீறல்கள் இடம்பெற்றிருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.சிறிலங்காவில் மனித உரிமைகளை மீறியவர்களை பொறிமுறை ஒன்றின் ஊடாக நீதியின் முன் நிறுத்துவதை உறுதிப்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அறிக்கை தயாரிக்கப்பட்டவுடன், எமது உள்நாட்டுப் பொறிமுறை நடவடிக்கைக்காக அதனை எமது பார்வைக்கு அனுப்ப முடியும் என்று நம்புகிறோம்.எமது பொறிமுறை உருவாக்கப்படும் வரை, ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிடாமல் தடுத்து வைத்திருக்கக் கூடும் என்று நம்புகிறோம்.
பெரும்பாலும், ஓகஸ்ட் மாதம் வரை அறிக்கை தாமதிக்கப்படலாம். குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் உள்நாட்டுப் பொறிமுறை இரண்டு மாதங்களுக்குள் சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கும்.ஐ.நா மனித உரிமை ஆணையாளரையும் சிறிலங்கா வருமாறு அழைத்துள்ளோம்“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.