Breaking News

மஹிந்த அரசு செய்த ஒப்பந்தங்களை ரத்து செய்தது புதிய அரசு

இலங்கை குறித்து நன்மதிப்புப் பிரசாரம் செய்வதற்காக அமெரிக்க நிறுவனங்களுடன் செய்யப்பட்டிருந்த ஒப்பந்தங்களை புதிய அரசாங்கம் ரத்துச்செய்துள்ளது. 

மஹிந்த அரசாங்கம் இலங்கை குறித்து சிறந்த முறையில் பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் சர்வதேச விசாரணையை கோரும் தீர்மானங்கள் அமெரிக்க காங்கிரஸில் நிறைவேறுவதை தடுப்பதற்கும் பெருமளவு பணத்தை வழங்கி, அமெரிக்க நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமே ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவாசம் தெரிவித்துள்ளார்.

இலங்கை குறித்து பிரசாரங்களை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கான அவசியமிருப்பதாக இலங்கையின் புதிய அரசாங்கம் கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவியேற்றவுடன் இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் ரத்தாகிவிட்டன என அறிகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர், மாதம் 35 ஆயிரம் அமெரிக்க டொலர்களில் தங்களது நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் நீடிக்கப்படமாட்டாது என இலங்கை தூதரகம் அறிவித்துள்ளதாக அமெரிக்க நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, தங்களுடனான ஒப்பந்தம் ரத்துச்செய்யப்பட்டுவிட்டதாகவும், எனினும் இலங்கை மத்திய வங்கி 180 ஆயிரம் அமெரிக்க டொலர்களை செலுத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ள இன்னொரு நிறுவனம் இது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்த ஒப்பந்தங்களில் தான் கைச்சாத்திடாததால் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இன்னமும் இந்த நிறுவனங்களுக்கு பணம் செலுத்தவேண்டுமா என்பது தனக்கு தெரியாது என தூதுவர் தெரிவித்துள்ளார்.