Breaking News

வட மாகாண சபை தீர்மானத்தை தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் -வைகோ

இலங்கை வடக்கு மாகாண சபை தீர்மானத்தை ஆதரித்து தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 60 ஆண்டுகளாக இரத்தத்தாலும், கண்ணீராலும் எழுதப்பட்ட ஈழத்தமிழர்களின் வரலாற்றில் நம்பிக்கை வெளிச்சமாக இலங்கையின் வடக்கு மாகாண சபையில் ஒரு மகத்தான தீர்மானம் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 

கடந்த ஆண்டு ஜெனீவா மனித உரிமை கவுன்சிலில், 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் 2011 நவம்பர் வரை இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை செய்யப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் நீதி கிடைக்காது. ஏனெனில், 1950 களில் தொடங்கி, இலங்கைத் தீவில் அடுத்தடுத்து வந்த சிங்களப் பேரினவாத அரசுகளால் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டி, இலங்கை வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் முன்மொழிந்த தீர்மானத்தை முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் சட்டசபையில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றி உள்ளார். 

1948 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் திகதி, ஐ.நா. மன்றத்தின் பொதுச்சபையில், இனப்படுகொலையைத் தடுக்கவும், தண்டிக்கவும் நிறைவேற்றப்பட்ட பிரகடனத்தில் வரையறுக்கப்பட்டுள்ள இனப்படுகொலைக் குற்றங்களுக்கு உரிய அத்தனை நிகழ்வுகளும் இலங்கையில் நடைபெற்று உள்ளன என்பதை இந்தத் தீர்மானம் ஆணித்தரமான ஆதார சாட்சியங்களோடு எடுத்துக் காட்டுகின்றது. 

 1956 இல் சிங்கள மொழி மட்டுமே என்று கொண்டு வரப்பட்ட சட்டம்; அறவழியில் தமிழர்கள் எதிர்த்தபோது நடத்தப்பட்ட அடக்குமுறை; 1958 ல் நடைபெற்ற படுகொலைகள்; 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நடத்தப்பட்ட படுகொலைகள்; 77 ஆம் ஆண்டு தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்; 81 இல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது; 83 இல் நடைபெற்ற வெலிக்கடைச் சிறைப் படுகொலைகள் தொடங்கி 2008-09 மே வரையிலும் நடைபெற்ற படுகொலைகள், தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்ட கொடுமைகள் உள்ளிட்ட அனைத்துக் கொடூரச் சம்பவங்களும் இத்தீர்மானத்தில் விவரிக்கப்பட்டு உள்ளன. 

கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட சுதந்திரமான குழு தனது விசாரணையில், இனப்படுகொலை குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றும், இனக்கொலைக் குற்றவாளிகளைத் தண்டிக்கும் நடவடிக்கைகளை ஐ.நா. மன்றத்தின் பாதுகாப்பு கவுன்சில் மேற்கொள்ள வேண்டும் என்றும் வடக்கு மாகாண சபைத் தீர்மானம் பிரகடனம் செய்கிறது. இலங்கைத் தீவில் கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியுற்று, புதிய அதிபராக மைத்ரி சிறிபாலசேனா பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்னரும், ஈழத்தமிழர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடர்கிறது; மூன்று தமிழர்களை ஒரு இராணுவ வீரர் கண்காணிக்கும் நிலையே நீடிக்கிறது.

 ஈழத்தமிழர்களின் துயரத்தைப் போக்க புதிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்றும் வடக்கு மாகாண சபை தீர்மானம் சுட்டிக் காட்டுகின்றது. ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் அமர்வு வருகின்ற மார்ச் மாதத்தில் நடக்க இருக்கின்றது. கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானம் நீர்த்துப் போனதாக இருந்தாலும், அதனையே நிராகரிக்கவும், போர்க்குற்றங்கள் குறித்து சிங்கள அரசே விசாரணை செய்து கொள்ளும் என்றும், மைத்ரிபால சிறிசேனா அரசு அறிவித்து விட்டது. 

அதனையே இந்தியாவின் நரேந்திர மோடி அரசு வழிமொழிய முடிவு எடுத்து விட்டது. இந்தியாவின் முன்னைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஈழத்தமிழர்களுக்குச் செய்த துரோகத்தை சற்றும் பிசகாமல் நரேந்திர மோடி அரசு தொடர்ந்து செய்கிறது. இன்னும் ஒரு படி மேலே செல்லவும் துணிந்து விட்டது. ஆனால், இந்திய இலங்கை அரசுகளின் கூட்டுச் சதிக்கு ஆப்பு வைக்கின்ற விதத்தில், வடக்கு மாகாண சபையின் தீர்மானம் அமைந்து இருப்பது புதிய வெளிச்சத்தையும், நம்பிக்கையையும் தருகின்றது. இந்த வேளையில், ஈழத்தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகளாக ஏழு கோடிப் பேர் வாழும் தாய்த் தமிழகத்தின் கடமை மிக முக்கியமானதாகும். 2011 இல் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற அனைத்து இந்திய அண்ணா தி.மு.க. அரசின் அன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் துணிச்சலாக முடிவு எடுத்து, ‘இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ என்று தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். 

‘சுதந்திரத் தமிழ் ஈழம் அமைப்பதற்கு ஈழத்தமிழர்கள் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்; அதில் உலக நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள், அந்தந்த நாடுகளில் வாக்கெடுப்பில் பங்கேற்க வகை செய்ய வேண்டும்; இனக்கொலைக் குற்றத்திற்கு ராஜபக்ச கூட்டத்தை அனைத்துலக நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்த வேண்டும்’ எனத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, 2013 மார்ச் 23 இல் நான் கோரிக்கை விடுத்தேன். இதே வாசகங்களைக் கொண்ட தீர்மானத்தை, மார்ச் 27 ஆம் திகதி தமிழகச் சட்டமன்றத்தில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றினார். 

நான் அதனை வரவேற்று, ‘வரலாறு பொன் மகுடம் சூட்டும்’ என்று அறிக்கையும் தந்தேன். எனவே, ஈழத்தமிழர்களுக்கு உலக அரங்கில் நீதி கிடைக்க வேண்டுமெனில், நடைபெற இருக்கின்ற தமிழகச் சட்டமன்றக் கூட்டத் தொடரில், இலங்கையின் வடக்கு மாகாண சபை பிரகடனம் செய்துள்ள தீர்மானத்தை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றிட, முதல் அமைச்சர் அவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அப்படி நிறைவேற்றப்படுகின்ற தீர்மானம், தமிழர் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும்; புதிய விடியல் பிறக்கும்! இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.