Breaking News

உள்ளூர் விசாரணையை ஏற்றுக் கொள்வது தமிழினத்திற்கு செய்யும் துரோகம்- கஜேந்திரகுமார்

ஐ.நா விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டுள்ள காலப்பகுதியில், சர்வதேச விசாரணையாளர்கள் இலங்கைக்கு வந்து வடக்கு, கிழக்கில் சாட்சியங்களாக இருக்கின்ற தமிழ் மக்களிடம் நேரடி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனி கோரியுள்ளது.

உள்ளூர் விசாரணை அறிக்கையை சிலர் ஏற்றுக் கொள்வதென்பது தமிழினத்திற்கு செய்கின்ற மாபெரும் துரோகம் என்று சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதற்கு ஆதரவாகச் செயற்படுபவர்களை தேசத் துரோகிகளாக அடையாளப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

 தமிழ்த் தேசியக் மக்கள் முன்ணனியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியியலாளர்கள் சந்திப்பின் போதே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண சபையில் தமிழர் தாயகத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த தமிழினத்தின் கருத்தாக இது இருக்கின்றது. ஆனால் இங்கு இராணுவம் குற்றம் இழைக்கவில்லை என்றும் இனப்படுகொலை என்ற ஏதும் நடக்கவே இல்லை என அரசாங்கம் மறுத்து வந்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடரில் வெளியிடப்படவிருந்த இலங்கை மீதான சர்வதேச விசாரணை அறிக்கையை பிற்போட வேண்டுமென ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் கோரியதன் அடிப்படையில், மேற்குலக நாடுகளின் விருப்பத்திற்கமைய ஆட்சி மாற்றமும் ஏற்பட்டதையடுத்து மேற்படி விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களும் இங்கு நடைபெற்றதும் இனப்படுகொலை தான் என்பதனை திடமாகக் கூறியுள்ள நிலையில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அரசும் அதனை மறுதலித்து இங்கு ஒன்றுமே நடைபெறவில்லை எனக் கூறி நியாயப்படுத்துவதற்குவதற்கு முயற்சித்து வருகிறது.

இவ் அறிக்கையினை பிற்போடுவதற்கு உதவியாக இருந்த சர்வதேசம் இதற்கும் உதவ வேண்டும். ஆயினும் இந்த அறிக்கை பிற்போடப்பட்டாலும் அக்காலப்பகுதியில் மூன்று பிரதான விடயங்களைக் குறிப்பிடுகின்றோம்.

இதில் முதலாவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு நேரடியாக வந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் வாக்குமூலங்களைப் பெற்று தொடர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக ரோம் சாசனப்படி சர்வதேச நீதிமன்றத்தினூடாக இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதாவது இன அழிப்பென்பது சர்வதேச சட்ட ரீதியில் மன்னிப்பு வழங்க முடியாத குற்றமாகும். தூயகத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என்பதனை வடக்கு மாகாண சபையில் ஏகமனதாக தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

இறுதியாக பொறுப்புக் கூறல் என்ற விடயத்தில் ஐ.நா விசாரணையை உள்ளக விசாரணையாக முடக்கி விடக் கூடாது. ராஜபக்ச அரசின் காலத்திலும் எவ்வாறு நாம் சார்ந்த கட்சி உள்ளக விசாரணையை ஏற்றுக் கொள்ளவில்லையோ, அதே போல் தற்போதுள்ள அரசின் காலத்திலும் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அரசியலில் உள்ள முக்கியத்துவத்தை விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டும். அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் இங்கு ஓர் ஆட்சி மாற்றத்தையே விரும்பினார்களே தவிர தமிழ் மக்களின் நலன்களில் அக்கறையில்லை.

யுத்த வெற்றியில் தமக்கே அதிக பங்கு உண்டு எனக் கூறி வருகின்ற தற்போதைய ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தலைமையிலான புதிய அரசின் உள்ளக விசாரணையை எவ்வாறு நீதியானதென ஏற்றுக் கொள்ள முடியும்.இதற்கு உடந்தையாக இருக்கும் தமிழ் அரசியல் தலைமைகளை இனத் துரோகிகளாகக் அடையாளப்படுத்துவதற்கும் தயங்கமாட்டோம்.

எனவே மக்கள் போராட்டத்தின் மூலமாகவே இவற்றையெல்லாம் வெற்றி கொண்டு தமிழினத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கும் அநீதிகளுக்கும் நிலைத்து நிற்கக் கூடியதாக நீதி நியாயம் வழங்கப்பட வேண்டும்.ஆனால் அதற்கு தயாரில்லாத மேற்குலக நாடுகள் தமது தேவைகளுக்கு ஏற்பவே செயற்படுவதனை இந்த அறிக்கை பிற்போடப்பட்டுள்ளதன் ஊடாகவே விளங்கிக் கொள்ள வேண்டும்.

எனவே தமிழினத்திற்கு நிலைத்து நிற்கக் கூடிய நீதியான தீர்ப்புக் கிடைத்தால் மட்டுமே சரியான நேரிய பாதையில் செல்ல முடியும் என தெரிவித்தார்.