முப்படைத் தளபதிகளையும் பதவிநீக்கம் செய்ய வேண்டும் – பொன்சேகா
தேர்தலுக்கு மறுநாள் அதிகாலையில் அலரி மாளிகையில் முன்னெடுக்கப்பட்ட சதித் திட்டத்துடன் தொடர்புடைய முப்படைகளினதும் தளபதிகளையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜனநாயக கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.அலரி மாளிகையில் கடந்த 9ம் நாள் அதிகாலையில் முன்னெடுக்கப்பட்ட பலாத்காரமாக ஆட்சியைத் தக்கவைக்கும் சதித்திட்டத்துடன், முப்படைகளினதும் தளபதிகள் தொடர்புபட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இராணுவத் தளபதி லெப். ஜெனரல் தயா ரத்நாயக்க, விமானப்படைத் தளபதி எயர் மார்சல் கோலித குணதிலக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா ஆகியோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஜெனரல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.
‘அவர்களால் கடைசி நேரத்தில் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.நான் சுதந்திர நாள் நிகழ்வில் பங்கேற்காததற்குக் காரணம், எனக்கு எதிராக கூட்டுப்படைகளின் தளபதியும், முப்படைகளின் தளபதிகளும் பொய்யான சாட்சியங்களை அளித்திருந்தார்கள் என்பதே’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.