Breaking News

மகிந்தவுடன் அவுஸ்ரேலியப் பிரதமர் கொண்டிருந்த உறவு மர்மமாகவே இருந்தது - ரணில்

இலங்கையின் முன்னாள்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன்  அவுஸ்ரேலியப் பிரதமர் ரொனி அபோட் கொண்டிருந்த நெருக்கமான உறவு இலங்கையர்களுக்கு ஒரு மர்மமாகவே இருந்தது என்று  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தி ஒஸ்ரேலியன் ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள செவ்வியிலேயே இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

“அவுஸ்ரேலியாவின் புதிய குடிவரவு அமைச்சர் பீற்றர் டட்டனை முன்னைய அரசாங்கம் வரவேற்க வாய்ப்பில்லை.தஞ்சம் கோரி வருவோரின் படகுகளைத் தடுப்பதற்கு ராஜபக்ச அரசாங்கத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான விலையாக  சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்து அவுஸ்ரேலியா அமைதியாக இருந்தது.

ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் முன்னைய அரசாங்கத்தில் இருந்தவர்கள் தொடர்புபட்டிருந்தனர் என்பது உறுதியாகியுள்ளது.ராஜபக்சவுடன் தொடர்புடையவர்களாலேயே இந்த ஆட்கடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஒரு கட்டத்தில் இது அவுஸ்ரேலியாவுக்கும் ராஜபக்ச அரசாங்கத்துக்கும் இடையிலான உடன்பாடாக மாறியது.

மனித உரிமைகள் விடயத்தில் நீங்கள் வேறு வழியைப் பார்த்துக் கொண்ட பின்னர்  அப்போதைய பாதுகாப்புச் செயலர் கடற்படையை ரோந்து செய்ய விட்டார். காவல்துறை அல்லது கடற்படையின் பாதுகாப்பு முறையைத் தாண்டி எவரும் வெளியே செல்லக் கூடிய நிலை இருந்திருக்கவில்லை.

ஆட்கடத்தல் என்பது அவுஸ்ரேலியாவுக்கு முக்கியமான பிரச்சினை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். எமது அரசாங்கம் ஆட்கடத்தல்காரர்கள் புறப்படுவதைத் தொடர்ந்து தடுக்கும். எந்த வழியிலாவது ராஜபக்ச அரசாங்கம் ஆட்கடத்தல்களைத் தடுத்திருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அவர்களுக்குத் தேவைப்பட்டது, ஒரு பேரம் பேசும் இணக்கப்பாடு தான். முன்னாள் குடியவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் கடைசியாக இலங்கை வந்திருந்த போது  அப்போது எதிரணியில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளைச் சந்தித்த மறுத்ததன் மூலம்  இராஜதந்திர நெறிமுறையை மீறிவிட்டார்.

இதன் விளைவாக   புதிய குடிவரவு அமைச்சரவை தற்போது கூட்டணி அரசின் முக்கிய அங்கமாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து உணர்வுபூர்வமற்ற வரவேற்பே கிடைக்கக் கூடும். இது அவுஸ்ரேலியாவின் பக்கத்தில் உள்ள ஒரு ஓட்டை. நான் அவுஸ்ரேலிய அரசாங்கத்துக்கு எதிரானவன் அல்ல.

ஆனால், நீங்கள் உங்களின் அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். ராஜபக்ச ஆட்சிக்கு முழு ஆதரவை வழங்கிய ஏனைய சில நாடுகளுக்கும் கூட இது பொருந்தும்.ராஜபக்ச அரசாங்கம் மனித உரிமைகளை மிதித்த போது  ஜனநாயகம் ஆபத்தில் இருந்த போது, இந்த நாடுகள் அது சிறிலங்காவின் விவகாரம் என்று அமைதியாக இருந்தன.” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.