சம்பூர் காணிகளை திரும்ப வழங்கத் தீர்மானம்!
திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள் குடியேற்றம் தடைப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை அவர்களிடம் மீளக் கையளிப்பது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது.
இந்த தகவலை தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் ஜே.வி. பி தலைவருமான அனுர குமார திஸநாயக்கா தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், '' சம்பூர் பிரதேசத்தில் பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் மக்கள் அங்கிருந்து முன்னைய அரசாங்கத்தினால் வெளியேற்றப்பட்டு அவர்களது காணிகள் பல்தேசிய கம்பனிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அங்கு வாழ்ந்த மக்கள் தமது சொந்த மண்ணில் மீள் குடியேற்றப்படாமல் இடம்பெயர்ந்தவர்களுக்கான அகதி முகாம்களில் வைகக்கப்பட்டுள்ளார்கள்.'' என்றார்.
சம்பூர் பிரதேச மக்கள் 2005ம் ஆண்டு போர் காலத்தில் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியிருந்தார்கள். போர் முடிவடைந்திருந்தாலும் அவர்களது மீள் குடியேற்றம் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ள நிலையில் கடந்த 10 வருடங்களாக அகதி முகாம்களிலே அவர்கள் தொடர்ந்தும் தங்கியுள்ளார்கள்.
தமது பாரம்பரிய மண்ணில் மீள் குடியேற்றத்திற்காக 10 வருடங்களாக போராட்டம் நடத்திவரும் சம்பூர் பிரதேச மக்களை பொறுத்தவரை இந்த தீர்மானம் அவர்களுக்கு தமது மீள் குடியேற்றம் தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.