மாற்றம் அமைப்பின் நிகழ்வில் வடமாகாண அமைச்சர்கள் பங்கேற்கமாட்டார்கள் - விக்னேஸ்வரன்
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்களும் மாகாண அமைச்சர்களும் பங்கேற்பதாக 'மாற்றம்' என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்நிகழ்ச்சியில் வடக்கு மாகாண அமைச்சர்கள் பங்கேற்கமாட்டார்கள் என முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் 'மாற்றம்' அமைப்பின் பொதுச்செயலாளருக்கு கடிதமூலம் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 22 ஆம் திகதி 'மாற்றம்' நிறுவனம் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்களான சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுற்றுலாத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, மீன்பிடி அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா ஆகியோரும் வடமாகாண சபையின் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
“மாற்றம்” நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியின் காலை அமர்வு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்திலும் மாலை அமர்வு மத்தியமாகாண அமைச்சர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான கலந்துரையாடலாக அமைச்சு ரீதியாக வெவ்வேறு இடங்களிலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இவ்வாறு அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தமைக்குக் கல்விச் சமூகம் எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில் வடமாகாண அமைச்சர்கள் தரப்பிலும் தங்களுடன் இவ்வாறான ஒரு நிகழ்ச்சி தொடர்பாக எவ்விதமான கலந்தாய்வும் இல்லாமலேயே அழைப்பிதழில் பெயர்கள் போடப்பட்டிருப்பதாகவும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வடக்கு முதல்வர் அனுப்பிய கடிதத்தில், இக்கூட்டத்துக்கான திகதி எங்கள் அமைச்சர்களின் ஒப்புதலோ கலந்துரையாடலோ இல்லாமல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதனைக் காணுகிறேன். இக்கூட்டத்தில் அரசியல் உள்நோக்கங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கத்தின் அமைச்சர்களும் அல்லது பொருத்தமான அலுவலர்களும் ஆரம்பத்திலேயே இதன் நோக்கம் மற்றும் இது எந்தவிதத்தில் வடமாகாண மக்களுக்கு நன்மை பயக்கும், என்பதனைக் கலந்துரையாடாமல் என்னையும் எனது அமைச்சர்களையும் கூட்டத்துக்கு அழைப்பது பொருத்தமற்றது.
இது சம்பந்தமாக நீங்கள் மத்திய அரசாங்க அமைச்சர்களுக்கு என்ன கருத்தை கூறியிருக்கின்றீர்கள் என்பது தெரியவில்லை. எனினும் எங்கள் அமைச்சர்கள் எவரும் இக்கூட்டத்தில் பங்குபற்றமாட்டார்கள் என்பதைக் கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.