புலிகளின் யாழ். மாவட்ட முன்னாள் அரசியல் பொறுப்பாளர் டொமினிக் மரணம்
90களின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ். மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த டொமினிக் (இந்திரன் சண்முகலிங்கன்) நேற்று ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் காலமானார்.
இவர் யாழ்.மாவட்டப் பொறுப்பாளராக இருந்த சமயத்தில்தான் பிரேமதாஸா அரசுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் நடைபெற்ற சமரசப் பேச்சு முயற்சிகள் தோல்வியைடைந்து, 1990 ஜூனில் இரண்டாம் ஈழயுத்தம் வெடித்தது. யுத்தம் வெடிப்பதைத் தடுக்கும் முயற்சியாக புலிகளுடன் சமரசம் பேச வந்த பிரேமதாஸா அரசின் வெளிவிவகார அமைச்சர் ஏ.ஸி.எஸ்.ஹமீத் யாழ்ப்பாணம், நல்லூரில் புலிகளின் பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் பலாலி திரும்பினார். அவரை வழியனுப்பிவைக்க, புலிகளின் யாழ். மாவட்டப் பொறுப்பாளர் என்ற முறையில் டொமினிக்கும் அவருடன் கூடச் சென்றார்.
பலாலி முன்னரங்க நிலைகளுக்கு அப்பால் யுத்த சூனியப் பிரதேச எல்லையில் அமைச்சர் ஹமீத்துக்கு டொமினிக் விடைகொடுத்த சமயம் இரு தரப்புகளுக்கும் இடையில் அங்கு சமர் மூண்டது. இரு தரப்புகளிலிருந்தும் சரமாரியாக வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. எனினும் இரு தரப்புத் தலைவர்களும் விழுந்து எழும்பி, ஓடித் தப்பி தத்தமது பிரதேசத்துக்குள் எப்படியோ வந்து சேர்ந்தனர். இந்த விடயம் அச்சமயத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அச்சமயத்தில் புதிதாக திருமணம் செய்த டொமினிக்கின் துணைவியார் விடுதலைப் புலிகளின் நீதித்துறையில் ஒரு நீதியரசராகப் பணியாற்றினார்.
எனினும் பின்னர் ஒரு குறுகிய காலத்தில் இயக்கத் தலைமையோடு ஏற்பட்ட ஒரு சிறு முரண்பாட்டை அடுத்து டொமினிக்கும் துணைவியாரும் இயக்கத்தை விட்டு வெளியேறி லண்டனில் குடியேறினர். அண்மையில் சில காலம் பல்வேறு நோய் உபாதைகளுக்கு உள்ளாகியிருந்த டொமினிக் திருச்சியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
அவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, ஹாட்லிக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். இந்திய அமைதிப்படை இலங்கையில் காலூன்றியிருந்த காலத்தில் தீரமான போராளியாக பல களச்சமர்களில் டொமினிக் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.