ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வு நிகழ்ச்சி நிரலில் மாற்றமில்லை!
போர்க்குற்ற விசாரணை அறிக்கையை தள்ளிப்போடுமாறு இலங்கை அரசு சர்வதேசத் தரப்புகளுக்கு அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் அமர்வு நிகழ்ச்சி நிரலில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெரியவருகிறது.
இந்த நிகழ்ச்சி நிரல்படி எதிர்வரும் மார்ச் மாதம் 25 ஆம் திகதி இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 28 ஆவது அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலில் உள்ள தலைப்புக்களில் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாத அமர்வில் இலங்கை குறித்து அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, இலங்கையில் இடம்பெற்றன என்று கூறப்படும் போர்க்குற்றங்கள், மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஆராய்ந்து அடுத்த வருடம் (28ஆவது) அமர்வில் அறிக்கை சமர்ப்பிக்க மனிதவுரிமைகள் கவுன்ஸில் கோரியது. இதற்கென சர்வதேச விசாரணைக்குழு ஒன்றையும் முன்னாள் மனிதவுரிமைகள் ஆணையாளர் நவிப்பிள்ளை நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.