ஈழம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ரணில் தெரிவிப்பு
ஈழம் உருவாகுவதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை. எமக்கு புலிச்சாயம் பூசும் தரப்பினர்களின் கைக்குள்ளே கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன், கருணா போன்றோர் உள்ளனர். இந்நிலையில் புலிகளை மீள உருவாக்குவதற்கு துணைபோவதாக எம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றிற்கு அவர் வழங்கிய விசேட செவ்வியொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் 2005ம் ஆண்டு தேர்தலில் இரகசிய ஒப்பந்தத்தினூடாகவும் பாரிய தொகை நிதியை வழங்கி தமிழ் மக்கள் வாக்களிப்பதை நிறுத்தி என்னை தோற்கடித்தார்கள்.அது மாத்திரமன்றி எமது தரப்பினர்களில் உள்ள ஜெனரல் சரத் பொன்சேகா, முன்னைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரை கொலை செய்ய விடுதலைப் புலிகளே முயற்சித்தனர்.
எனவே அவ்வாறானதொரு நிலைமையில் விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டுமென்ற தேவை எமக்குக் கிடையாது. அதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்கப்போவதில்லை.தேசிய சுதந்திர தின விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றியது. இது நல்லிணக்கத்துக்குக் கிடைத்த வெற்றியாகும்.
சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை சிறப்பான முறையில் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் புதிய அரசியல் முறையை ஏற்படுத்துவது எமக்குள்ள பாரிய சவாலாகும். இந்நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி நல்லாட்சியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கிலேயே நாம் ஆட்சிபீடம் ஏறினோம்.
குறித்த இலக்குகளை பொறுமையுடன் கையாண்டு வெற்றிகொள்ள வேண்டும்.அத்தோடு சர்வாதிகார ஊழல் மோசடிகளுடனான ராஜபக்ச ஆட்சியை தோல்வியடையச் செய்து நாட்டின் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கி பாராளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்குவது முக்கிய குறிக்கோளாகும். அதற்காக வேண்டியே மக்கள் வரம் எமக்கு கிடைக்கப் பெற்றது என்றார்.