Breaking News

வடக்கு மணல் அகழ்வு விவகாரத்தில் அமெரிக்கா கவனம் செலுத்தும்

வடக்கில் இடம்பெற்ற, இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளது என போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. 

அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அமெரிக்க அரசியல் விவகாரங்களிற்கான சிரேஷ்ட அதிகாரி மண்ணகழ்வு தொடர்பான தகவல்களை பெற்றுச் சென்றார் என இயக்கத்தின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; "வடக்கில் கடந்த காலங்களில் குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளினால் தான்தோன்றித்தனமாக எந்த அனுமதியும் இல்லாமல் மண்ணகழ்வில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் இலாபமீட்டினர் எனினும் மண் அகழ்வுக்குள்ளான பிரதேசங்கள் மிக மோசமான முறையில் சூழல் அழிவை எதிர்நோக்கியுள்ளன. குறிப்பாக நாகர்கோவில், மணற்காடு போன்ற இடங்களில் காணப்பட்ட பல நூற்றுக்கணக்கான மண் திட்டுக்கள் காணமல் போயுள்ளன தற்போதும் இந்நிலை தொடர்ந்த வண்ணமேயுள்ளது. 

அரசியல் செல்வாக்குமிக்கவர்களே தமது மக்களின் வளங்களை தாங்களே சூறையாடிவருகின்றனர். இவர்கள் தவிர இங்கு நிலை கொண்டுள்ள இராணுவமும் எமது வளங்களை சூறையாடி வருகின்றது. தொண்டைமானாறு அக்கரையில் தனியார் காணிகளில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர் இவை தொடர்பில் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வந்த அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரியிடம் எமது இயக்கம் தெரியப்படுத்தியது. 

இதன்போது அவர், இனி வரும் காலங்களில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கவனம் செலுத்தும் என உறுதியளித்தார். மேலும் இவ்வாறான சட்டவிரோத மணல் அகழ்வுகள் இனியும் தொடர்ந்தால் தம்மிடம் தெரியப்படுத்துமாறும் கூறினார்."