Breaking News

இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு எப்போதும் இருக்கும் – இந்தியப் பிரதமர்

சிறிலங்காவுக்கு இந்தியாவின் ஆதரவு எப்போதும் உள்ளது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். புதுடெல்லியில் இலங்கை ஜனாதிபதியுடனான  பேச்சுக்களின் முடிவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து, உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வில் உரையாற்றிய அவர்,“ இந்திய மக்களின் சார்பில் உங்களது வெற்றிக்கு எமது வாழ்த்துகள்.

ஒன்றுபட்ட, அமைதியான, செழிப்பான நாட்டை விரும்பும் மக்களின் பிரதிநிதியாக உங்களைக் காண்கிறேன்.சிறிலங்காவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளராவதற்கு நாம் விருப்பம் கொண்டுள்ளோம்.எமது இருதரப்பு வர்த்தக உறவுகளை மீளாய்வு செய்வதற்காக, இந்திய- சிறிலங்கா வர்த்தக செயலர்கள் விரைவில் சந்தித்துப் பேச்சு நடத்துவர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நானும், இருதரப்பு உறவுகள் மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்து சிறந்த கலந்துரையாடலை நடத்தியுள்ளோம்.எமது பரஸ்பர நம்பிக்கையின் எடுத்துக்காட்டாக, இருதரப்பு சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு அமைந்துள்ளது.இந்த விவகாரத்தில் ஆக்கபூர்வமான மனிதாபிமான அணுகுமுறையை கடைப்பிடிக்க இணங்கியுள்ளோம்.

மீனவர்கள் பிரச்சினைக்கு இலங்கை ஜனாதிபதியும், நானும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் வான் மற்றும் கடல் போக்குவரத்துகளை மேலும் முன்னேற்றுவோம்.

இந்திய மக்களினதும், அரசாங்கத்தினதும், நல்லெண்ணமும், ஆதரவும் எப்போதும் சிறிலங்காவுக்கு உள்ளது.எனது அழைப்பையேற்று வருகை தந்த இலங்கை ஜனாதிபதிக்கு நன்றி கூறுகிறேன்.அவரது அழகிய நாட்டுக்கு மார்ச் மாதம் பயணம் செய்வதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்.” என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.அங்கு உரையாற்றிய சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

“ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எமது நாட்டுக்கு வருகை தரவுள்ளது, மதிப்புமிக்கதும்,ஆசீர்வாதமுமாகும்.எமது உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கும், இருநாடுகளுக்கும் இடையில் தொடர்புகளை வலுப்படுத்தவும், சிலமுடிவுகளை நாம் எடுத்துள்ளோம்.

இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும். நாம் இப்போது முன்னேற்றப் பாதையில் செல்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.இந்த நிகழ்வில் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில், அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.