சீனாவுக்கு நிலத்தை சொந்தமாக வழங்க முடியாது – இலங்கை
1.5 பில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்படும் கொழும்புத் துறைமுக நகரில், சீனாவுக்கு ஒரு பகுதி நிலத்தை சொந்தமாக வழங்கும் முன்னைய அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டு விதி மீளாய்வு செய்யப்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அந்த நிலப்பகுதியை சீனா தனது கடற்படை செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தக் கூடும் என்ற கவலை காரணமாகவே இந்த உடன்பாட்டு விதி குறித்து மீளாய்வு செய்யப்படுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
1.5 பில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்படும், கொழும்புத் துறைநகரத்தில் 108 ஹெக்ரெயர் நிலப்பரப்பை சீனாவின் தொடர்பாடல் கட்டுமான நிறுவனமே வைத்துக் கொள்ள, முன்னைய அரசாங்கம் இணங்கியிருந்தது.
இதில், 20 ஹெக்ரெயரை சீனா சொந்தமாக வைத்திருக்கவும், ஏனைய நிலப்பரப்பை 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் வைத்துக் கொள்ளவும் இணக்கம் காணப்பட்டிருந்தது.
நிலத்தை சொந்தமாக வழங்குவதில்லை என்றும், அந்த நிலப்பகுதி சிறிலங்காவின் சட்டங்களுக்குக் கீழ் நிர்வகிக்கப்படுவதெனவும் புதிய பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு செய்தியாளர் சங்கத்தில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
“போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் உட்கட்டுமான அபிவிருத்திக்கு சீனா முக்கிய பங்களிப்புச் செய்துள்ளது.ஆனால், கொழும்பு ஒரு குறுநில அரசாக மாறுவதற்கு விட முடியாது. நீர்மூழ்கிகள் குறித்து தீவிரமான சந்தேகங்கள் உள்ளன.
கொழும்புத் துறைமுகமும், துறைமுக நகரமும், சீன அரசாங்கத்தின் இராணுவப் பயன்பாட்டுக்காக கையளிக்கப்பட்டால், அது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் கூட பாரதூரமான பிரச்சினையை ஏற்படுத்தும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.