Breaking News

புதிய மைதானத்தில் இல்ல மெய்வல்லுனர் போட்டி (படங்கள் இணைப்பு)


மு/ஒலுமடு தமிழ் வித்தியாலய சமூகத்தினர் இம்முறை புதிய விளையாட்டு மைதானத்தில் தமது வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியை நடாத்தியுள்ளனர்.

இது வரை காலமும் தகுந்த விளையாட்டு மைதானமின்றி ,ஒரு சிறிய வளாகத்தில் மட்டுமே அங்கு விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்று வந்த நிலையில் இம்முறை புதிய மைதானத்தில் மாணவர்கள் களம் கண்டமை , பாடசாலைச் சமூகத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புதிய மைதானத்திற்காகவும் மாணவர்களின் விளையாட்டு சீருடைகளுக்காகவும் என தனது கடந்த ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 1.8 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கிய வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கு பாடசாலை சமூகத்தினர் நன்றி தெரிவித்தனர். 

இது பற்றி மேலும் தெரிய வருகையில்,

கடந்த 2015/01/29 அன்று நடைபெற்ற ஒலுமடு தமிழ் வித்தியாலயத்தின் இவ்வாண்டுக்கான வருடாந்த இல்ல மெய் வல்லுநர் விளையாட்டுப்போட்டியில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

அயல் பாடசாலை அதிபர்,கிராம சேவகர், மாங்குளம் மக்கள் வங்கி உதவி முகாமையாளர்,மாணவர்கள் பொது மக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்ட நிகழ்வில் உரையாற்றிய பாடசாலை அதிபர் சர்வேஸ்வரன் அவர்கள் தெரிவிக்கையில் , 

"விளையாட்டு மைதானத் தேவை குறித்து ஒலுமடு சமூகத்தால் பலருக்கும் கோரிக்கை வைக்கபட்ட போதும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. நீண்ட காலமாக எங்கள் பாடசாலை மாணவாகள் ஒரு சிறிய வளாகத்திலேயே நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே விளையாடி வந்தனர். இது வரை காலமும் இங்கு ஒரு முழுமையற்ற விளையாட்டுப் போட்டியே நடைபெற்று வந்தது. 

பாடசாலைக்கு சொந்தமான நிலம் இருந்த போதும் பற்றைகள் வளந்த நிலையில் செப்பனிடப்பட வேண்டிய தேவை இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு கௌரவ வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் ஒலுமடு தமிழ் வித்தியாலயத்தின் பாடசாலை நிர்வாகத்தினராலும் கிராம மக்கள் பிரதிநிதிகளாலும் இக்கோரிக்கை வைக்கப்பட்டது.இதையடுத்து மைதானத்திற்காகவும் மாணவர்களின் விளையாட்டு சீருடைக்காகவும் என 1.8 லட்சம் ரூபாவை ஒதுக்கி, இவ்வாண்டு புதிய மைதானத்தில் எங்கள் மாணவர்கள் களம் காண உதவி செய்த வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கு பாடசாலை சமூகத்தின் சார்பிலும் கிராம மக்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்கின்றேன் என்றார். 


வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுப்பொருட்களையும் வெற்றிக் கிண்ணங்களையும் வழங்கி வைத்து உரையாற்றிய ரவிகரன், பாடசாலையினதும் கிராமத்தினதும் தேவைகள் குறித்து தொடர்ந்தும் கவனமெடுப்பேன் என்று தெரிவித்தார்.