இந்தியாவின் பிடிக்குள் சிக்காமல் நழுவினார் மைத்திரி
சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும், சீனாவையோ, இந்தியாவையோ சார்ந்திருக்கப் போவதில்லை என்றும், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நான்கு நாள் அதிகாரபூர்வ பயணமாக, கடந்த 15ம் நாள் புதுடெல்லி சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று முன்தினம், இந்தியத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
இந்தப் பேச்சுக்களின் போதே, மைத்திரிபால சிறிசேன, புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் குறித்து இந்தியாவிடம் திட்டவட்டமான சில தகவல்களை தெரிவித்துள்ளார்.“இந்தியாவுடனும் சீனாவுடனும், எமது அரசாங்கம் நட்புறவுடன் இருக்கும். ஆனால் எந்தவொரு தரப்பையும் சார்ந்து செயற்படாது.
புதுடெல்லிக்கும் பீஜிங்கிற்கும் இடையில் அணிசேராமல் செயற்படும். சீனாவுடனும் கூட எமது அரசாங்கம் இயல்பான உறவை பேண விரும்புகிறது.” என்று மைத்திரிபால சிறிசேன தெளிவாகத் தெரிவித்துள்ளார்.அதேவேளை, கொழும்புத் துறைமுக நகரத் திட்ட விவகாரத்திலும், மைத்திரிபால சிறிசேனவின் தமது தெளிவான நிலைப்பாட்டை இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.
‘சீனாவின் 1.4 பில்லியன் டொலர் முதலீட்டில் முன்னெடுக்கப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தின், 25 வீதமான கட்டுமானப் பணிகள் முடிந்திருக்கின்றன.இந்தக் கட்டத்தில் சீனாவை வெளியேறுமாறு கோருவது சாத்தியமற்றது, நடைமுறைக்கு ஏற்புடையதாகாது.
முன்னைய ஆட்சியாளர்களால் இறுக்கமான உடன்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தை விட்டு சீனாவை வெளியேற்றினால், அதற்காக சிறிலங்கா கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.’ என்றும் இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும், 500 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படும் கொழும்புத் துறைமுக நகரத்தில், 80 ஏக்கர் நிலத்தை சீனாவுக்குச் சொந்தமாக கையளிக்க வகை செய்யும் உடன்பாட்டு விதி குறித்து மீளாய்வு செய்யப்படும் என்று மைத்திரிபால சிறிசேன இந்தியத் தலைவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
எனினும், இந்த நிலம் சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.சீனாவுக்கு வரும் 27ம், 28ம் நாள்களில் பயணத்தை மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்த விவகாரம் குறித்து அந்த நாட்டின் தலைவர்களுடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.