குழப்பத்தில் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேசசபைத் தேர்தல்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கு பழைய வேட்புமனுவின் படியே வரும் 28ம் திகதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், பெரும் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு இந்த இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தலுக்கு வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் வாக்களிப்பு இடைநிறுத்தப்பட்டது.தற்போது, நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ள நிலையில், வரும் 28ம் திகதி தேர்தலை நடத்தவுள்ளதாக சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
ஆனால், 2011ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுவது குழப்பங்களுக்கே வழி வகுக்கும் என்று பல்வேறு கட்சிகளும் கருத்து வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே இரண்டு முறை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, பிற்போடப்பட்டதாகவும், இதனால் பெருமளவு செலவுகள் ஏற்பட்ட நிலையில், புதிய வேட்புமனுவை தேர்தல் ஆணையாளர் கோரினால் அதற்கெதிராக நீதிமன்றம் செல்லப் போவதாக ஐ.தே.கவின் சார்பில் புதுக்குடியிருப்பு பிரதேசசபைத் தேர்தலில் போட்டியிடும் தலைமை வேட்பாளர் குமாரவேல் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கரைத்துறைப் பற்று பிரதேசபையின் 9 ஆசனங்களுக்கு 15 வேட்பாளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தியிருந்தது. இவர்களில் மூன்று பேர் வேறு கட்சிகளுக்குத் தாவிச் சென்று விட்டனர், மேலும் இருவர் வெளிநாடு சென்று விட்டனர்.
கரைத்துறைப்பற்று பிரதேசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்த அன்ரனி ஜெயநாதன், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு, மாகாணசபை உறுப்பினராகத் தெரிவாகி விட்டார்.
“மாகாணசபை உறுப்பினராக உள்ள நிலையில், இன்னொரு தேர்தலில் நான் போட்டியிட முடியாது, தேர்தல் ஆணையாளர் பழைய வேட்புமனுவின் படியே தேர்தலை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இன்னமும் எமது கட்சி தேர்தல் ஆணையாளரைச் சந்திக்கவில்லை” என்று அன்ரனி ஜெயநாதன் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பிரதேசசபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்த, கனகசுந்தரசுவாமி வீரவாகுவும், வடக்கு மாகாணசபை உறுப்பினராகத் தெரிவாகி விட்டார்.
அதேவேளை, தேர்தல் ஆணையாளர் புதிய வேட்புமனுவைக் கோரினால், தாம் தனித்து வீணைச் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான ஈபிடிபி தெரிவித்துள்ளது.
“கடந்தகாலத்தில் கிடைத்த சில மோசமான அனுபவங்கள் இந்த முடிவுக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்தப் பகுதி மக்கள் எமது கட்சி சொந்தச் சின்னத்தில் போட்டியிடுவதை விரும்புகின்றனர். ஆனால், தேசிய அரசியலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் எமது கூட்டணி தொடரும்” என்று ஈபிடிபி பொதுச்செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கரைத்துறைப்பற்று பிரதேசசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட, வேட்புமனுத் தாக்கல் செய்த 15 பேரில், 10 பேர் தமது பெயர்களை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்குமாறு, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம், கடிதம் கொடுத்துள்ளனர்.
இறுதிப் போர் நடந்த எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய முன்னைய அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்ய வேண்டியிருந்தது.தற்போது மக்களின் ஆணை வேறுவிதமாக அமைந்துள்ளது. எமது வேட்பாளர்களில் ஒருவர் வெளிநாடு சென்று விட்டார்.
எம்மால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் போட்டியிட முடியாது” என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமை வேட்பாளராக கரைத்துறைப்பற்று பிரதேசசபைக்கு வேட்புமனுத் தாக்கல் செய்த வீரசிங்கம் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
புதிய வேட்புமனுக் கோரப்படாது போனால், தேர்தலைப் புறக்கணிப்போம் என்று கரைத்துறைப்பற்று பிரதேச மக்கள் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.