டில்ஷான், சங்கா அதிரடி! பங்களாதேஷை வென்றது இலங்கை
டில்ஷான் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் துடுப்பாட்டத்தில் மிரட்ட இலங்கை அணி 92 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணியை வெற்றிகெண்டுள்ளது.
11 ஆவது உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நகரங்களில் இடம்பெற்று வருகின்றது.
அவுஸ்திரேலியாவின் மெல்பேண் மைதானத்தில் இடம்பெற்ற உலகக் கிண்ண லீக் போட்டியில் குழு “ஏ” யில் இடம்பெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் ஒன்றையொன்று சந்தித்தன.
இப் போட்டி இலங்கை அணி அவுஸ்திரேலிய மண்ணில் விளையாடும் 100 ஆவது ஒருநாள் போட்டியாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 332 ஓட்டங்களைப் பெற்றது.
பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சை பதம் பார்த்த இலங்கை அணியின் டில்ஷான் மற்றும் சங்கக்கார ஆகியோர் சதம் பெற்றனர்.
400 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடிய குமார் சங்கக்கார ஆட்டமிழக்காது 76 பந்துகளில் 105 ஓட்டங்களையும் திலகரட்ண டில்ஷான் ஆட்டமிழக்காது 146 பந்துகளில் 161 ஓட்டங்களையும் திரிமன்னே 52 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பங்களாதேஷ் அணி சார்பாக பந்து வீச்சில் ருபெல் குசைன் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். 333 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
ஆட்டத்தின் முதல் ஓவரின் 3 ஆவது பந்தில் ஓட்டமெதனையும் பெறாது பங்களாதேஷ் அணியின் முதலாவது விக்கெட் பறிக்கப்பட்டது. இதன் பின்னர் பங்களாதேஷ் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் பறிக்கப்பட 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்று 92 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
பங்களாதேஷ் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஷபிர் ரஹ்மான் 53 ஓட்டங்களையும் ஷகிப் அல் ஹசன் 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் மலிங்க 3 விக்கெட்டுகளையும் லக்மால் மற்றும் டில்ஷான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பங்களாதேஷ் அணியை 92 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளைப் பெற்று 2 ஆம் இடத்திற்கு முன்றேறியுள்ளது. துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் அசத்திய இலங்கை அணியின் டில்ஷான் இப் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.