Breaking News

ஏமாற்றத்தை ஏற்படுத்திய ஐ.நாவின் முடிவு - சி.சிறிதரன்

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையை சமர்ப்பிப்பது, ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பல தரப்பினரை ஏமாற்றத்திற்கும் அதிருப்திக்கும் உள்ளாக்கியிருக்கின்றது.

இந்த அறிக்கை குறிப்பிட்ட கால அட்டவணையின்படி, அடுத்த மாதம் 28 ஆம் திகதி ஐநா மனித உரிமைப் பேரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தையடுத்து, புதிய அரசாங்கம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதைப் பிற்போடுமாறு, இத்தகைய விசாரணைக்கு மூல காரணமாக இருந்து செயற்பட்ட அமெரிக்கா மற்றும் ஐ.நா. செயலாளர் நாயகம், ஆகியோரிடமும், சர்வதேசத்திடமும், சர்வதேசத்தின் முக்கிய நிறுவனங்களிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இது தொடர்பாக ஐநா மனித உரிமைப் பேரவையின் தலைவரே இறுதி முடிவெடுக்க முடியும் என்று அமெரிக்கா மற்றும் ஐ.நா. மன்றம் என்பன தெரிவித்திருந்தன. இதனையடுத்து, இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளுக்குப் பொறுப்பான ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசெய்னுடன் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நடத்திய நேரடி பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அறிக்கையை 6 மாத காலத்திற்குப் பிற்போடுவதற்கு அவர் ஒப்புக்கொண்டு, அதனை ஐநா மனித உரிமைப் பேரவைக்குப் பரிந்துரைத்துள்ளார்.

இதனையடுத்தே இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டிருக்கின்றது. செயிட் அல் ஹுசெய்னின் கருத்து ‘முன்னைய நேர அட்டவணையின்படி, உரிய நேரத்தில் (மார்ச் 28 ஆம் திகதி) இந்த அறிக்கையை சபையில் சமர்ப்பிப்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. அதேவேளை, இலங்கையில் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையடுத்து, இந்த அறிக்கையை, சிறிது காலத்திற்குப் பின்போடுவது பற்றி ஆலோசிப்பதற்கான வலுவான காரணங்களும் இருக்கின்றன.

இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு தீர்மானத்தை எடுப்பது மிகவும் கஷ்டமான காரியமாகும்’ என ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசெய்ன் கூறியுள்ளார். ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துடன் இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் முன்னைய அரசாங்கம் உடன்படுவதற்கு மறுத்திருந்த பல்வேறு விடயங்களில் கடப்பாட்டுடன் ஒத்துழைப்பதற்குத் தயார் என அந்த நாட்டின் புதிய அரசாங்கம் மிகத் தெளிவாக உறுதியளித்திருக்கின்றது.

எனவே, கடப்பாட்டுடன் கூடிய அந்த உறுதிமொழிக்கு செயல் வடிவம் கொடுப்பதற்காக, இலங்கை அரசாங்கத்துடன் செயற்பட வேண்டியிருக்கின்றது’ என்று தனது தீர்மானம் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். ஆயினும், ஒரே ஒரு தடவை மாத்திரமே இந்த விசாரணை அறிக்கை ஒத்தி வைக்கப்படும். அதன் பின்னர் அந்த அறிக்கை வரும் செப்டம்பர் மாதம் நிச்சயமாக சமர்ப்பிக்கப்படும் என்பதை அவர் உறுதியாக நிச்சயப்படுத்தியிருக்கின்றார்.

அது மட்டுமல்லாமல், இந்த விசாரணைகளை நடத்திய முன்னாள் பின்லாந்தின் அதிபரும், சர்வதேச சமாதானச் செயற்பாட்டுக்கான நோபல் பரிசு வென்றவருமாகிய மார்ட்டி, அட்டிசாரி, நியூஸிலாந்து நாட்டின் முன்னாள் ஆளுநர் நாயகமும், மேல் நீதிமன்ற நீதிபதியும், கம்போடிய நாட்டின் விசேட நீதிமன்றங்களின் நீதிபதியுமாகிய சில்வியா கார்ட்ரைட், பாகிஸ்தானின் முன்னாள் உச்ச நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத் தலைவரும், பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையகத்தின் முன்னாள் தலைவரும், மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் பல்வேறு ஆணைகளைப் பொறுப்பேற்றுச் செயற்பட்டிருந்தவருமாகிய அஸ்மா ஜஹாங்கிர் ஆகிய மூன்று நிபுணர்களும் இந்த அறிக்கை ஒத்தி வைக்கப்படுவதை விரும்பியிருக் கின்றார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்னும் சிறிது காலத்திற்கு இந்த அறிக்கையை ஒத்தி வைப்பதன் மூலம், இலங்கை அரசாங்கம் மனித உரிமை விவகாரங்களில் ஒத்துழைப்பதற்குத் தெரிவித்துள்ள விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவும் உதவியாக இருக்கும் என்றும் அந்த நிபுணர்கள் கருத்து வெளியிட்டிருப்பதையும், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அல் ஹுசெய்ன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய பின்னணியில், ஐ.நா. மனித உரிமைப் பேரவையிடம் அறிக்கையை ஒத்திவைப்பதற்கு அனுமதிக்குமாறு கோரியிருந்ததாகவும், இதன் மூலம் கிடைக்கின்ற இடைவெளியானது, இலங்கை தொடர்பான இன்னும் வலுவுள்ள, இறுக்கமான அறிக்கைக்குத் துணைபுரியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த அறிக்கை பிற்போடப்படுவதில் உள்ள முக்கியமான அம்சங்கள் பற்றியும் ஐநா மனித உரிமை ஆணையாளர் அல்ஹுசெய்ன் குறிப்பிட்டிருக்கின்றார். ‘

இலங்கையின் மனித உரிமை மீறல்களில் பலர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை நான் நன்கறிவேன். இவர்களில் பலர், மிகவும் துணிச்சலுடன் இந்த விசாரணைக்குழுவின் முன்னிலையில் தோன்றி சாட்சியமளித்திருக்கின்றார்கள். எனினும், இலங்கையில் உள்ளூரில் நடத்தப்பட்ட பல மனித உரிமை விசாரணைகள் தோல்வியடைந்து அல்லது முடக்கப்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ள அவர்கள், எமது அலுவலகத்தினால் நடத்தப்பட்ட மிகவும் முக்கியத்துவம் மிக்க இந்த சர்வதேச விசாரணையும் கிடப்பில் போடப்பட்டு, அது அப்படியே கரைந்து போகும்.

இந்த விசாரணை அறிக்கையைத் தாங்கள் ஒருபோதும் காண முடியாது. அது வெளியிடப்படமாட்டாது. என்று அவர்கள் எண்ணியிருந்திருப்பார்கள். அதற்கான முதற் படியாகவே, இந்த அறிக்கை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படுவது, இப்போது ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கருதுவார்கள் என்பதையும் நானறிவேன். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அந்த அச்சத்தையும், அதனால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற ஆர்வம் மிகுந்த மனக்கிலேசத்தையும் நன்கு உணர்ந்திருக்கின்றேன்.

ஆனாலும், எந்தவிதமான தப்பபிப்பிராயமும் கொண்டிருக்க வேண்டியதில்லை. இந்த அறிக்கை செப்டம்பர்; மாதத்தில் தவறாமல் சமர்ப்பிக்கப்படும் என்பதற்கு நான் என்னுடைய தனிப்பட்ட, உறுதியான, அசைக்கமுடியாத உத்தரவாதத்தையளிக்கின்றேன். எனக்கு முன்னர், ஐ.நா. மனித உரிமை ஆணையாளராக இருந்தவர்களைப் போன்று, மனித உரிமை ஆணையாளர், பாதிக்கப்பட்டவர்களின் வலிமை மிக்க குரலாக ஒலிக்கும் வகையில் செயலாற்ற வேண்டியது,

அவருடைய முக்கியமான கடமைகளில் ஒன்று என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளாகிய உண்மையை அறிதல், அவர்களுக்கு நீதி கிடைத்தல், நிவாரணம் கிடைத்தல் என்பவற்றை உறுதி செய்யும்வகையில் பொறுப்பு கூறும் பொறுப்பு அமைய வேண்டும் என்பதுடன், நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்பதுடன், அவற்றுக்கு வழி வகுக்கும் நோக்கில் இந்த அறிக்கை நம்பகத்தன்மையுடன் நியாயபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் வெளிவரவேண்டும் என்பது எனது ஆவல் என்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அல் ஹுசெய்ன் விளக்கமளித்திருக்கின்றார்.

தெளிவாக இருப்பவர்களும் தெளிவற்றிருப்பவர்களும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அல் ஹுசைனின் கூற்றையும், அவர் இருக்கின்ற சூழ்நிலையையும் ஒப்பீடு செய்து நோக்குகையில் அவர் தனது செயற்பாட்டில் மிகவும் தெளிவாக இருப்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது. அதேநேரம், புதிய அரசாங்கமானது, இந்த நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை என்ற முன்னைய அரசாங்கத்தினதும், சிங்கள மக்கள் மத்தியில் அந்த அரசினால் உருவாக்கப்பட்டுள்ள அந்த நிலைப்பாட்டை வலுப்படுத்தி, சிங்கள மக்களைத் தன்பால் ஈர்த்துக் கொள்வதற்கான முயற்சியின் முதற் கட்டத்தில் வெற்றி பெற்றிருக்கின்றது என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது.

ஏனெனில் 100 நாள் வேலைத்திட்டத்தை முன்வைத்து, தேர்தலில் வெற்றி பெற்று இன்னும் 3 மாதங்களில் பொதுத்தேர்தலை நடத்தவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் தனக்கு முன்னால் இமய மலையைப் போன்று உறுதியாகவும் பிரமாண்டமான முறையிலும் எழுந்து நின்ற, சர்வதேச அளவிலான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயற்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பியிருக்கின்றது.

அதாவது, பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சர்வதேச விசாரணை அறிக்கையை இந்த அரசாங்கம் எதிர்கொண்டிருந்திருந்தால், சிங்கள மக்கள் மத்தியில் முன்னைய அரசாங்கத் தரப்பினர், இந்த அரசாங்கம் தமது பெரு மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய போர் வீரர்களையும் இராணுவத்தையும் காட்டிக் கொடுத்துவிட்டதாகக் குற்றம் சுமத்தி பெரிய அளவில் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்திருப்பார்கள். அத்தகைய ஒரு சூழலில் புதிய அரச தரப்பினர் தேர்தலில் வெற்றிபெறுவதென்பது குதிரைக் கொம்பாகவே இருந்திருக்கும். 

ஆனால் போர்க்குற்றச் சாட்டுக்கள் தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கை 6 மாதங்களுக்கு பிற்போடப்பட்டிருப்பதனால், அந்த ஆபத்தில் இருந்து புதிய அரசு தப்பியிருக்கின்றது. அது மட்டுமல்லாமல் போர்க்குற்றங்களுக்காக இலங்கையர்களைக் குற்றவாளியாக்குகின்ற சர்வதேசத்தின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு, அவர்களின் ஆதரவைப் பெற்று பல நல்ல காரியங்களை முன்னெடுப்பதற்குத் தாங்கள் வழி வகுத்திருப்பதாகத் தேர்தலில் மக்களுக்குக் கூறி அதன் ஊடாக வாக்குகளைப் பெறுவதற்கான வழி பிறந்திருக்கின்றது.

எனவே, அந்த வகையில் இலங்கையின் புதிய அரசாங்கத் தரப்பினரும் மிகவும் தெளிவாகக் காய் நகர்த்தி, சர்தேச அழுத்தத்தில் இருந்து இப்போதைக்கு விடுபட்டிருக்கின்றார்கள். அதேநேரம் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இடித்துரைத்து சர்வ தேசத்தின் ஆதரவுடன் போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு முன்னோடியான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளையும் அரச தரப்பினர் இப்போது மழுங்கடித்திருக்கின்றார்கள்.

அதாவது, போர்க்குற்றங்களே இழைக்கப்பட்டன என்பதை, ‘தமிழ்த்தேசிய கூட்டமைப்பு’ என்ற பெயரில் அந்தக் கூட்மைப்பைச் சேர்ந்த தலைவர்கள் விடுத்த அறிக்கைகள், வடமாகாண சபையின்; இனப்படுகொலை பிரேரணை என்பன வலியுறுத்தி வந்திருந்த போதிலும், உள்ளூரில் நியாயமான நீதியான ஒரு விசாரணை பொறி முறையை உருவாக்கி அதன் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்ற, புதிய அரசாங்கத்தின் உறுதி மொழியை அதே கூட்டமைப்பின் பேரில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏற்றுக் கொண்டிக்கின்றார்.

உள்ளூர் விசாரணை பொறிமுறையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டிருப்பதாக அவர் ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருந்தாலும், அதே கூட்டமைப்பைச் சேர்நத பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடைய கூற்று அவருடைய தனிப்பட்ட கூற்றாகும். அது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கூற்றல்ல. கூட்டமைப்பின் நிலைப்பாடல்ல என்று மறுத்துரைத்திருக்கின்றார்.

தமிழ் மக்களின் முக்கிய அரசியல் அமைப்பாகவும், தலைமையாகவும் கருதப்படுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் இருந்தே இவ்வாறு ஒன்றுக்கொன்று முரண்பாடுள்ள கூர்மையான கருத்துக்கள் வெளியாகியிருப்பது பார்வையாளர்கள் மத்தியில் நகைப்புக்கிடமாக்கியிருக்கின்றது. இறந்தவர்கள் எத்தனை பேர், இன்னும் எண்ணி முடியவில்லை அதேநேரம், யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களாகப் போகின்ற நிலையில் யுத்தத்தில் தங்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள் எத்தனை பேர் இறந்திருக்கின்றார்கள் என்று இன்னும் எண்ணிக்கொண்டிக்கின்றார்கள்.

கணக்கெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த கணக்கெடுப்பு இன்னும் முற்றுப் பெறவில்லை. அது எப்போது முற்றுப் பெறும் என்பதை அறுதியிட்டு கூற முடியாத அவலமான ஒரு நிலைமையே தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இறுதி யுத்தத்தின்போது குறைந்தது 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சர்வதேச நிறுவனமாகிய ஐ.நா. மன்றம் கூறியிருக்கின்றது. இந்த எண்ணிக்கை இதையும்விட அதிகமாக இருக்கலாம் என்பதையும் அது புறந்தள்ளவில்லை.

அதேநேரம், அரசாங்கத்தின் குடிசனப் புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தில் பொறுப்புமிக்கவரும், சமயத்தலைவருமாகிய மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், ஐ.நா. மன்றம் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுக்குச் செய்துள்ள ஒரு முறைப்பாட்டின்படி, யுத்த மோதல்கள் இடம்பெற்ற வேளை, வன்னிப்பிரதேசத்தில் இருந்தவர்களில், ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு கணக்கில்லாமல் இருக்கின்றது. அவர்கள் கொல்லப்பட்டார்களா அல்லது வெறுமனே காற்றில் மறைந்து மாயமாகிப் போனார்களா என்பது தெரியாமலிருக்கின்றது.

இதையும்விட விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட இராணுவச் செயற்பாடுகள், ஆட்கடத்தல்கள் கைதுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டவர்களாகக் கருதப்படுகின்ற செம்மணி புதைகுழிக்குள் புதைக்கப்பட்டிருந்தவர்களின் கொலைகளுக்குக் காரணமானவர்கள் யார் என்பது பற்றி நடத்தப்பட்ட நீதிமன்ற விசாரணைகள் முற்றுப்பெற வில்லை. நடு வழியில் அது கைவிடப்பட்டிருக்கின்றது. திருகோணமலையில் சர்வதேச தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பலர் படையினரால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற வலுவான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகள், திருகோணமலை மாணவர்களின் படுகொலைகள் போன்ற பல மனிதாபிமானத்திற்கு விரோதமான காட்டுமிராண்டித்தனமான கொலைச் சம்பவங்கள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.

இதைவிட உதிரியாக எத்தனையோ சித்திரவதை சம்பவங்களும், பாலியல் வன்முறைக் கொலைச் சம்பவங்களும் பாலியல் குற்றங்களும் அப்பட்டமாக இடம்பெற்றிருந்தமை நீதிமன்றங்கள் வரையில் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இவ்வாறான கொடுமையான சம்பவங்களில் ஒரு சம்பவம் கூட முழுமையாக விசாரணை செய்யப்படவில்லை. அந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் நீதிமன்றங்களினால் சட்டத்திற்கமைவாகத் தண்டிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை.

யுத்த காலத்தில் மட்டுமல்ல. யுத்தமோதல்கள் இடம்பெறுவதற்கு முன்னதாக 1958 ஆம் ஆண்டு கலவரம், 1977 ஆம் ஆண்டு கலவரம், 1983 ஆம் ஆண்டு இனக்கலவரம் என எத்தனையோ சம்பவங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக அந்த இனத்தை அழித்தொழிக்கும் நோக்கத்தில் இந்த நாட்டில் இடம்பெற்றிருக்கின்றன. இத்தகைய எந்தவொரு சம்பவத்திலும் முறையான விசாரணைகள் நடைபெற்று, ஆகக் குறைந்தது ஒருவராவது நீதியின் முன்னால் அடையாளம் காணப்படவில்லை.

குற்றவாளியாகக் கருதப்பட்டு தண்டனை அளிக்கப்படவில்லை. இத்தகையதொரு பின்புலத்தில், மனித உரிமை மீறல், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல் என்ற வகையில் போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையொன்றின் அறிக்கை உலக மன்றம் ஒன்றில் சமர்ப்பிக்கப்படுவதை பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியிலேயே நேரெதிர் முரண்பட்ட கருத்துக்கள் இருப்பதை எந்த வகைப்படுத்துவது என்று தெரியவில்லை.

சம்பந்தனின் கருத்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கை ஒத்தி வைக்கப்பட்டிருப்பது உங்களுக்கு கவலையளிக்கின்றதா என பி.பி.சி. தமிழோசையினால் கேட்கப்பட்டபோது, அதற்குப் பதிலளித்த அவர், கவலையளிக்கின்றது என்று கூற மாட்டேன். அது குறித்து சந்தோசப்படுவதற்கும் தேவையில்லை. இது ஒரு தடவைதான் ஒத்தி வைக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கின்றது. எனவே, இந்த ஒத்தி வைப்பின் பின்னர், செப்டம்பர் மாதத்தில் இந்த அறிக்கை வலுவானதாக சமர்ப்பிக்கப்படலாம். என்றாலும், ஐ.நா.வுக்கு ஆதரவளிக்க வேண்டியிருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

அதேநேரம் உண்மை வெளிவரவேண்டும் என்பதற்காக நேரடியாகவும் கடிதம் மூலமாகவும் தாங்கள் தெரிவித்திருந்ததாகவும் சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்;. அந்த வகையில் திட்டமிட்டபடி அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை தாங்கள் வலியுறுத்தியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அப்படியானால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் ஜெனிவா சென்றிருந்த சுமந்திரன் அறிக்கை பிற்போடப்படுவது பரவாயில்லை என்றவாறாகக் கருத்து வெளியிட்டதாக புலம் பெயர் மக்கள் தரப்பில் இருந்து தகவல் வெளியிடப்பட்டிருக்கின்றது.

அதேநேரம், சர்வதேசத்தின் பங்களிப்புடன் உள்ளக விசாரணையை ஆதரிக்கின்றோம் என்ற கருத்துப்படவும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார். ஆனால், இந்த விசாரணை அறிக்கை பின்போடப்படுவதை கூட்டமைப்பு எதிர்ப்பதாகவும், அது கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று உறுதியாகச் செயற்பட்டு வருவதாகவுமே கருத்து நிலவி வந்தது. ஆனால், அவர்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் சிதைக்கின்ற வகையில் கூட்டமைப்பின் தலைமையில் செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கின்றன.

இது மிகவும் கவலைக்குரியது. அதி முக்கியமான விடயங்களில் தமது அரசியல் தலைவர்கள் உண்மையாகவே என்னவிதமான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றார்கள், அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது அவர்களை நம்பியிருக்கின்ற மக்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். அல்லது தெளிவுபடுத்தப்பட வேண்டும். இத்தகைய வெளிப்படைத் தன்மை இல்லையானால், அந்த மக்கள் தலைமைகளைத் தூக்கி எறிவதற்குத் தயங்கமாட்டார்கள் என்பதைத் தமிழ்த் தலைவர்கள் கவனத்திற் கொண்ருப்பது இன்றைய கால கட்டத்தில் அதுவும் இன்னும் 3 மாதங்களில் ஒரு பொதுத் தேர்தலைச் சந்திக்கவுள்ள வேளையில், நன்கு உணர்ந்து அதற்கேற்ற வகையில் செயற்பட வேண்டியது முக்கியமாகும்.