காணிகளை கேட்கும் உரிமையாளர்கள்! மீண்டும் இடம்பெயரும் அபாயத்தில் கிளிநொச்சி மக்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 20 வருடங்களாக வசித்துவரும் மக்களின் காணிகளை வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலவைர் சகாதேவன் தெரிவித்தார்.
இதன் கரணமாக சுமார் 400 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்ட இடத்திலிருந்தும் இடம்பெயர வேண்டிய துரதிஷ்ட நிலை ஏற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்
கிளிநொச்சி பரந்தன், சிவபுரம் பகுதியில் கடந்த 1993,94 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்குவதிலும், உதவிகளைப் பெறுவதிலும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட 400 குடும்பங்கள் யுத்தகாலப்பகுதியில் இடம்பெயர்ந்தவர்களே அங்கு குடியேற்றப்பட்டுள்ளனர்.காணிக்குரிய உரித்தாளர்கள் எனக்கூறிக்கொண்டு 50 ஏக்கர் காணிகள் தங்களுடையது என தற்போது வெளிநாட்டிலிருந்து வருகைத்தந்திருக்கும் சிலர் சட்டத்தரணிகளுடன் அங்கு விஜயம் செய்து காணிகளை கேட்டு வருகின்றனர்.
காணி உரிமையாளர்களுக்கு காணி உரித்து இருந்தாலும்கூட அந்த இடத்தில் கடந்த 20 வருடங்களாக வாழ்ந்துவரும் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தற்போதும்கூட வசதிகளின்றியே உள்ளனர்.
மாற்று வழியாக அந்தக்காணிகளை சட்டரீதியாக அந்த மக்களுக்கே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் காணி உரித்தாளர்கள் சட்டரீதியான ஆவணங்கள் வைத்திருக்கும் பட்சத்தில் அவர்கள் இணங்கினால் சந்தை விலைக்கு ஏற்ப அந்த காணிகளை மீள்குடியேறிய மக்களுடன் பேச்சு நடத்தி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதே நியாயமானதானும் என்பதுடன் மீள்குடியேறிய மக்களுக்கு சற்று நிவாரணமாக கருத முடியும் என்று கூறினார்.