இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் - சர்வதேச மன்னிப்புச் சபை
கடந்த ஆண்டிலும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
2014ம் ஆண்டில் 160 நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டவிரோத கைதுகள், படையினரின் சித்திரவதைகள், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை, பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற சட்டங்களின் ஊடாக மக்கள் துன்புறுத்தப்படுகின்றமை போன்ற சம்பவங்கள் இலங்கையில் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் காணாமல் போன அல்லது கடத்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.சிறுபான்மை மதத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதுடன் அடக்குமுறைகள் தொடர்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் இந்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி, எதிர்காலத்தில் துரித கதியில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது. இலங்கையில் பாரியளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இவற்றை ஒரே இரவில் மாற்றியமைக்க முடியாது என்பது யதார்த்தமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
காவல்நிலையங்களில் கைதிகளின் உயிரிழப்புச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாகவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அடக்குமுறைகள் அதிகரித்துச் செல்வதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.