அரசியல் கைதிகள் விடுதலை, மீள்குடியமர்வு குறித்து கூட்டமைப்பு ரணிலுடன் பேச்சு
இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியமர்வு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தியுள்ளது.
நேற்று முன்தினம் மாலை அலரி மாளிகையில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. பிரதமருடன் மீள்குடியேற்ற அமைச்சர் எ.எம்.சுவாமிநாதன், திருகோணமலை கடற்படை அதிகாரிகள் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தரப்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.இதன்போது, அரதசியல் கைதிகள் விடுதலையை துரிதப்படுத்துமாறு, ரணில் விக்கிரமசிங்கவிடம், இரா.சம்பந்தன் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
இந்தந் சந்திப்பின் போது, சம்பூர் மற்றும் வலி.வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை விரைவாக மீளக்குடியமர்த்துவது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஆராய, மூன்று பேர் கொண்ட குழு நிதி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், அரசியல் கைதிகள் துரிதமாக விடுதலையாகும் வாய்ப்புள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுன்னாகம் மின் நிலையத்தின் எண்ணெய்க் கழிவால், அந்தப் பகுதியில் உள்ள கிணறுகளில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டினர்.இதுகுறித்து, தாம் மின்சக்தி அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வருவதாக ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.