Breaking News

மக்களின் உணர்வின் வெளிப்பாடே இனப்படுகொலை தீர்மானம்! - ஜனாதிபதியிடம் வடக்கு முதல்வர்

ஒட்டுமொத்த வடக்கு மக்களின் உணர்வின் வெளிப்பாடே வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை குறித்த தீர்மானம்  என ஜனாதிபதியிடம் தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் வடக்கு மகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். 

இந்தச் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையின் கடல் எல்லையில் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்கள் பற்றிய கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் உள்நாட்டலுவல்கள், கடற்றொழில் அமைச்சர் கௌரவ ஜோசப் மைக்கல் பெரேரா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன, வட மாகாண ஆளுநர் கௌரவ எச்.எம்.பி.பீ.பளிஹக்கார, வடமாகாண முதலமைச்சர்; கௌரவ சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண மீன்பிடி மற்றும் வர்த்தக வாணிபத்துறை அசைமச்சா டெனீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

அதன் பின்னர் வடமாகாண முதலமைச்சர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் சந்தித்து அளவளாவினார். இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் வருமாறு:- ஜனாதிபதியின் இந்திய விஜயம் குறித்து ஆராயப்பட்டது. 

இந்த முதற்கட்ட சந்திப்பின்போது இந்திய இலங்கை மீனவர்கள் விவகாரம் குறித்து விரிவாக பேசப்பட்டதாக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்தார் வடபகுதி கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைவதன் காரணமாக அப்பகுதி மீனவர்களே அதிகளவு பாதிக்கப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர், ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளின் போது இருநாடுகளினதும் கூட்டு ரோந்தின் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம் என்ற யோசனையை தான் முன்வைத்தார் என விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். 

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட வேறு பலரும் எனது யோசனையை ஏற்றுக்கொண்டனர். இலங்கை ஜனாதிபதிக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பின்போது இந்த விடயம் குறித்து ஆராயப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்பரப்பில் ட்றோலர் வகைபடகுகளை தடைசெய்யவேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

முன்னைய காலங்களில் இது போன்ற அத்துமீறல்கள் இடம்பெறுவதில்லை என்றும் தற்போதே இந்திய, தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிக்கின்றனர் என்றும் தெரிவித்தார். மீள்குடியேற்றம், கைதிகள் விடுதலை குறித்து விரைவில் நடவடிக்க எடுக்கவேண்டும் என்றும் இல்லையேல் மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவர் என்றும் தெரிவித்தார். வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள 6,500 ஏக்கர் காணிகளில் 1000 ஏக்கர் காணியே விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால முதலமைச்சரிடம் தெரிவித்தார்.